Published : 13 Oct 2023 03:24 PM
Last Updated : 13 Oct 2023 03:24 PM
அகமதாபாத்தில் சனிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கு இடையே இருத ரப்பு போட்டிகள் அரசியல் காரணங்களால் நடைபெறாமல் இருப்பதால் பெரிய தொடர்களில் இரு அணிகளும் மோதும்போது பெரிய அளவுக்கு ‘ஹைப்’ ஏற்றப்படுகிறது.
பிரேசில் - அர்ஜென்டினா, பிரான்ஸ்-ஜெர்மனி, இத்தாலி - ஸ்பெயின் கால்பந்து போட்டி போல் ஊதிப் பெருக்கப்படும். ஆனால், இப்படி செய்யப்படுவதில் ஒரு மாயை தோற்றம் உருவாகிறது. அது என்னவெனில், இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் உள்கட்டமைப்பு, வீரர்களின் பேட்டிங் பவுலிங் திறமை, இருநாட்டு வீரர்களின் ஊதியம், அணியின் வருமானம் உள்ளிட்டவற்றில் ஏதோ சரிசமமாக இருப்பது போன்ற மாயத் தோற்றம்தான் அது. ஆனால், உண்மை நிலவரம் வேறு. இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷனின் வருவாயை பாகிஸ்தானின் பாபர் அசாமின் வருவாயுடன் ஒப்பிட்டால் இஷான் கிஷன் எங்கோ ஓர் உயரத்தில் இருப்பார்.
இன்று கூகுளில் india vs pakistan என்று தட்டினால், கல்வியில் பெரிய நாடு இந்தியாவா பாகிஸ்தானா?, பொருளாதாரத்தில் இந்தியாவா பாகிஸ்தானா, எது சிறப்பாக இருக்கிறது என்ற ஒப்பீடுகள் காணக்கிடைக்கின்றன. ‘இந்தியா’ தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பது விடையாக இருக்கும் வேளையில், கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்படியல்ல.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பண பலம், அதிகார பலம், செல்வாக்கு ஆகியவற்றிற்கு முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்பது புரூஸ் லீக்கு முன் ஒல்லியான தேகம் கொண்ட ஒருவரை நிறுத்துவது போல்தான். ஆனால் இரு அணிகளின் நிலைகளும் ஏதோ சமம் போலவும் சம அணிகள் மோதும் போட்டி போலவும் ஒவ்வொரு முறையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது மாய தோற்றம் உருவாகிறது. இங்கு வெற்றி பெறும் அணி பெரிய அணி, தோல்வி அடையும் அணி சிறிய அணி என்பதாக அர்த்தம் செய்து கொள்ளக் கூடிய எளிமையான புரிதலுக்கான விவகாரம் அல்ல.
ஒருநாள் கிரிக்கெட்டின் புள்ளி விவரங்களின்படி இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு போட்டிகளில் சாதனைகள் பல பாகிஸ்தான் பக்கமே உள்ளதென்றாலும், சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி பிசிசிஐ-யின் செல்வாக்கு ஐசிசி அமைப்பில் அதிகரித்ததினால் சில, பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றது. அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலவீனமடைந்துள்ளது. பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் பலவீனம் அடைந்துள்ளது.
பாகிஸ்தானை கிண்டல் செய்ய இந்திய ஊடகங்களும், ரசிகர்களும் சொல்லிப் பெருமைப்படும் ஒரு கணக்கு 7-0 என்பதாகும். அதாவது 1992 உலகக் கோப்பை முதல் 7 முறை உலகக் கோப்பைகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியதில் ஏழிலும் இந்தியா வென்றது என்பதைக் குறிப்பதே இந்த 7-0 சமன்பாடு. ஆனால் ஒட்டுமொத்த இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் சாதனைகள் பற்றி தெரியுமா என்றால் நகைச்சுவை நடிகர் ‘என்னத்த’ கன்னையா பாணியில் ‘தெரியும்.... ஆனா தெரியாது’ என்று தான் இவர்களிடமிருந்து பதில் கிடைக்கும்.
உண்மை என்னவெனில், இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 134 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 73 போட்டிகளில் வென்றுள்ளது, இந்தியா 56 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது என்பதே அந்தப் புள்ளி விவரம். உள்நாட்டில் இந்திய அணி 11 போட்டிகளில் வெல்ல பாகிஸ்தான் அவர்கள் நாட்டில் இந்தியாவுக்கு எதிராக 17 போட்டிகளில் வென்றுள்ளனர். இந்திய மண்ணில் பாகிஸ்தான் 19 போட்டிகளில் வென்றுள்ளது. ஆக நேருக்கு நேர் பாகிஸ்தானின் கையே ஓங்கியுள்ளது. ஆகவே இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில் கிரிக்கெட் தராசில் பாகிஸ்தான் எடை அதிகமாக உள்ளது என்று கூறலாம்.
ஆனால், சமீப காலங்களில் அதிகாரத் தராசு சமமாக இல்லாமல் பிசிசிஐ-யின் அதிகாரம் ஐசிசி-யில் எந்த ஒரு கேள்விக்குமிடமின்றி ஒவ்வொரு அங்குலமாக ஆக்கிரமித்து வருவதால் எதிர்கால பயணத் திட்டங்கள் பிசிசிஐ-க்குச் சாதகமாகவே அமைக்கப்படுகிறது. அதனால்தான் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுடன் அதிகமாக விளையாடுவது இந்தியாவா பாகிஸ்தானா என்று எடுத்துப் பார்த்தால் நிச்சயம் இந்தியாதான் அதிகம் ஆடியிருக்கும்.
அதேபோல் எத்தனை இருதரப்பு தொடர்களை பாகிஸ்தான் ஆடுகிறது, எத்தனை இருதரப்பு தொடர்களை இந்தியா ஆடுகிறது என்று பார்த்தாலும் இந்தியாதான் அதிகம் ஆடுகிறது. ஏனெனில் இந்தியா ஆடினால்தான் ஐசிசி வருவாய் பெருகுகிறது, ஐசிசியின் பெருகும் வருவாயில் 38% வருவாயை பிசிசிஐ மீண்டும் தன்னகத்தே கொண்டுவந்து விடுகிறது. ஐசிசி வருவாய் பகிர்வில் சமச்சீர் தன்மை இல்லை. இதனால் என்ன ஆனது முதல் பலி ஜிம்பாப்வே கிரிக்கெட், இப்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட், வரும் காலங்களில் இலங்கை, வங்கதேசம் ஏன் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் கூட அழிந்துவிடும். இப்போது ஆஸ்திரேலியாவைப் பார்த்தால் அடுத்த பலி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தானோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஒருபுறம் அதிகாரத்தை வைத்து மற்ற நாட்டு கிரிக்கெட்களை அழிப்பதோடு ஐபிஎல் தொடரினால் எல்லா நாட்டு தேசிய அணிகளையும் பலவீனப்படுத்துகின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு போட்டிகளில் ஆடாததால்தான் இந்தப் போட்டிகளுக்கு இவ்வளவு ஹைப் தேவைப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பாகிஸ்தானின் கை ஓங்கி இருக்கும்போது அதிகாரத் தராசில் பிசிசிஐ-யின் பலம் ஓங்கியிருக்கிறது. பாகிஸ்தான் தங்கள் சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் போட்டிகளை ஆட முடிவதில்லை. இதனால் அந்த வீரர்களின் உத்வேகம் குறைந்துதான் இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஊழல், மேட்ச் பிக்சிங், நிர்வாக முறைகேடுகள் என்று சீரழிந்தது. அது வீரர்களையும் பாதித்து உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பையே பலவீனமடையச் செய்துவிட்டது.
மேலும், ஐசிசி மீதான பிசிசிஐ-யின் செல்வாக்கினாலும், பாகிஸ்தான் தொடர்களை இந்தியா தலையீட்டு எஃப்.டிபி. தீர்மானிப்பதாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் நோஞ்சானாகவே காட்சியளிக்கின்றது. நிலைமை இப்படியாக இருக்க, இந்தியா - பாகிஸ்தான் போட்டி வந்துவிட்டாலே வெற்றி பெற்றேயாக வேண்டும், உலகக் கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ பாகிஸ்தானை வீழ்த்தி விட வேண்டும் என்று இந்திய ரசிகர்களும், உலகக் கோப்பை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்தியாவை வீழ்த்தியாக வேண்டும் என்றும் பாகிஸ்தான் ரசிகர்களும் இரு அணிகளுக்கும் நிலவரம் என்னவென்று புரியாமல் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
உண்மையில், இந்திய கிரிக்கெட்தான் அதிகாரம், பண பலம், உள்கட்டமைப்பு, வசதிகள் என்று ஆரோக்கியமாக இருக்கின்றது, வீரர்களும் நல்ல பண வசதி, பிற வசதியுடன் மகிழ்ச்சியான உடல்/மன வளமுடன் இருக்கிறார்கள். ஆகவே, இந்திய அணிதான் வெல்ல வேண்டும். சூழ்நிலைமைகளின்படி பார்த்தால் பாகிஸ்தான் அணி தோற்கத்தான் வேண்டும். அப்படியே பாகிஸ்தான் வென்றாலும் அது அதிர்ச்சி வெற்றியே, இந்திய அணிக்கு அதிர்ச்சித் தோல்வியே. இந்திய அணி தோற்றால் அது பாகிஸ்தான் பலத்தினால் அல்ல, இந்திய அணியில் சீரியசாக ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.
இவற்றையெல்லாம் கண்டுகொள்ளமல், இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டி வந்துவிட்டால், இரு அணிகளும் சமமாக இருப்பது போன்ற ஹைப் கற்பிதமாகக் கட்டமைக்கப்படுன்றன. உண்மையில் பலவிதங்களில் சிதறடிக்கப்பட்ட சிதிலமாக்கப்பட்ட பாகிஸ்தான் அணிக் கட்டமைப்பு எப்படி பலவிதங்களிலும் வசதியாக இருக்கும் இந்திய அணியுடன் சமமாக இருக்க முடியும். ஆகவே, இந்த ஹைப்களெல்லாம் வெறும் ஹைப்கள்தான். கிரிக்கெட் என்பது விளையாட்டு சம்பந்தமாக இல்லாமல் அரசியல் சாயம் கொண்டதாக இருப்பது பெரிய கவலையளிக்கும் விஷயமாகும்.
ஆகவே, ஹைப்களை கண்டுகொள்ளாமல் நல்ல கிரிக்கெட் போட்டியை ரசிக்க வேண்டும். வெற்றி தோல்விகளை விடுத்து உண்மையான ஒரு கிரிக்கெட் பார்வையாளர்களாக அகமதாபாத் போட்டியை ரசிக்க வேண்டும் என்பதுதான் உண்மையான கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளாக இருக்க முடியும்.
இத்தகைய ஹைப்புக்கு இன்னொரு காரணம், 2008 முதல் 2016 வரை சிறுவர்களின் வாழ்க்கையில் கிரிக்கெட் ஒரு மையமாக இருந்தது. அப்போது புற விளையாட்டுகளை ஆடி வந்தனர். கிரிக்கெட் மைதானங்களில் நேரம் செலவிட்டனர். ஆனால், சமீப காலங்களில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, மொபைல் போன்கள், ஆன்லைன் கேம்கள் என்று இளைஞர்களின் கவனம் கிரிக்கெட்டை விட்டு வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. மெய்யுலகை விடுத்து குழந்தைகள், இளைஞர்கள் மெய்நிகர் உலகில் வாழ்ந்து வருகின்றனர். புற எதார்த்தம் என்னவென்பதே தெரியாமல் வளர்ந்து வருகின்றனர்.
தெருக்களில் கிரிக்கெட் மறைந்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் சுறுசுறுப்பான பங்கேற்பு இல்லாததால், எதிர்காலத்தில் திறமையான கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. மேலும், இது சர்வதேச அரங்கில் நாட்டின் செயல்திறனை மேலும் பாதிக்கும். இப்போதே அதன் விளைவுகளைப் பார்த்து வருகின்றோம். இந்த சமூக மாற்றத்தின் தாக்கங்களை சீர்படுத்த வேறுவிதமான நடவடிக்கைகள்தான் தேவைப்படுமே தவிர இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின் மீதான வெற்றி வெறி கொண்ட ஹைப் அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT