Published : 13 Oct 2023 06:51 AM
Last Updated : 13 Oct 2023 06:51 AM
சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைதொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள்வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. காயம் காணரமாக முதல் இரு ஆட்டங்களிலும் பங்கேற்காத கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்குதியை அடைந்துள்ளதை தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். இதனால் நியூஸிலாந்து அணியின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வில்லியம்சன் கேப்டன்ஷிப்பில் சாதுர்யமாக செயல்படக்கூடியவர். அவர் ஒருநாள் போட்டிகளின் ஏற்ற, இறக்கங்களை அறிந்தவர்.
மேலும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட வங்கதேச அணிக்கு எதிராக வில்லியம்சன் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான இன்னிங்ஸை விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லியம்சன் களமிறங்கும் பட்சத்தில் கடந்த இரு ஆட்டங்களிலும் அவரது இடத்தில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா அணியில் இடம் பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார். தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார்.
டாப் ஆர்டரில் டேவன் கான்வே, வில் யங், டேரில் மிட்செல் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இதில் டேவன் கான்வே, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளதால் சேப்பாக்கம் ஆடுகளத்தை நன்கு அறிவார். இதேபோன்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள மிட்செல் சாண்ட்னரும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிஎஸ்கேவுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்.
இதானல் இவர்கள் இருவரிடம் இருந்தும் உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி, வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். ஒருவேளை நியூஸிலாந்து அணி கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தால் லாக்கி பெர்குசனுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா தொடரக்கூடும்.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நிலையில் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்திடம்137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூஸிலாந்து அணிக்கு வங்கதேசம் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிப் அல் ஹசன், மஹேதி ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து வீச்சுகூட்டணி இந்தத் தொடரில் 2 இரு ஆட்டங்களில் கூட்டாக 11 விக்கெட்களை வீழ்த்தி உள்ளது. இவர்கள் சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யக்கூடும். பேட்டிங்கில் ஷகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஷான்டோ ஆகியோர் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்போது, “இரு அணியிலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். இவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு விரைவாக தகவமைத்துக் கொண்டு விளையாடுவது அனைத்து அணிகளுக்கும் சவாலான விஷயம்தான்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT