Published : 12 Oct 2023 11:48 PM
Last Updated : 12 Oct 2023 11:48 PM

ODI WC 2023 | டெங்குவில் இருந்து மீண்ட நிலையில் அகமதாபாத்தில் பயிற்சி மேற்கொண்ட கில்!

கோப்புப்படம்

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் விளையாடவில்லை. இந்த சூழலில் அகமதாபாத் நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிரபார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழலில் வியாழக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அந்தப் படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அவர் அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ள இந்திய அணியுடன் இணைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வரும் சனிக்கிழமை அன்று விளையாட உள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக அவர் மேட்ச் ஃபிட்னஸ்ஸை உறுதி செய்ய வேண்டி உள்ளது. சுமார் 1 மணி நேரம் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். நடப்பு ஆண்டில் இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1230 ரன்களை சேர்த்துள்ளார். 5 சதங்கள் மற்றும் 5 அரை சதங்கள் இதில் அடங்கும். அகமதாபாத் மைதானத்தில் அதிகளவிலான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார்.

முன்னதாக, சென்னையில் ஓட்டலில் தங்கியபடி சிகிச்சை பெற்று வந்த ஷுப்மன் கில்லுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் திங்கள்கிழமை மாலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினார். காய்ச்சலில் இருந்து சீராக மீண்ட அவர், புதன்கிழமை அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு அகமதாபாத் சென்றடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x