Published : 12 Oct 2023 07:35 PM
Last Updated : 12 Oct 2023 07:35 PM

ODI WC 2023 | “அம்மாவைப் பார்ப்பதே முக்கியம்” - அகமதாபாத் போட்டி குறித்து பும்ரா

அகமதாபாத்: "அகமதாபாத் மைதானத்தில் இதுவரை நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை" எனத் தெரிவித்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய ஆட்டமாக இது அமைந்துள்ளது. அமிதாப் பச்சன், ரஜினி போன்ற சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆட்டத்தை நேரில் பார்க்க இருக்கின்றனர். இதனால் 11 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 132,000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்காக அகமதாபாத் நகரில் இரு அணிகளும் முகாமிட்டுள்ளன.

இதனிடையே, இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைவிட தனது தாயை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பும்ராவின் சொந்த ஊர் அகமதாபாத். இதனால் நீண்ட நாள் கழித்து தனது தாயை பார்க்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். "அகமதாபாத்தில் முதலில் எனது தாயை பார்க்க செல்வேன். தாயை பார்ப்பதே எனக்கு முதல் அடிப்படியான விஷயம். நீண்ட நாள்களாகவே வீட்டிலிருந்து வெளியே இருக்கிறேன். எனவே எனது அம்மாவை வீட்டில் பார்க்க விருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சொந்த ஊர் மைதானத்தில் விளையாட இருப்பது தொடர்பாக பேசிய பும்ரா, "அகமதாபாத் மைதானத்தில் இதுவரை நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். எனினும் சொந்த ஊர் மைதானம். சூழல் வேறு உற்சாகமாக இருக்கும். நிறைய பேர் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். எல்லாம் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டி தொடரில் தனது 2வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x