Published : 11 Oct 2023 10:52 PM
Last Updated : 11 Oct 2023 10:52 PM
புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் இடையிலான பகை முடிவுக்கு வந்துள்ளது. களத்தில் இருவரும் பரஸ்பரம் கை கொடுத்து நட்பு பாராட்டியதோடு, அணைத்துக்கொண்டனர்.
புதுடெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது.
கேப்டன் ரோகித் சர்மா, 84 பந்துகளில் 131 ரன்களை குவித்தார். 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இஷான் கிஷன், 47 ரன்கள் எடுத்திருந்தார். கோலி 55 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களும் எடுத்தனர். இந்தியாவுக்கு இது நடப்பு உலகக் கோப்பை தொடரில் 2-வது வெற்றியாக அமைந்துள்ளது.
கோலி - நவீன் உல் ஹக் பகை: கடந்த ஐபிஎல் சீசனின் போது லக்னோ அணிக்காக விளையாடிய நவீன் உல் ஹக் மற்றும் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கோலியும் களத்தில் வார்த்தை போரில் ஈடுபட்டனர். அந்தப் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.
அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ‘இன்பமாய் இருக்குதய்யா’ என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல் ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது ‘கோலி.. கோலி..’ என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.
இந்த சூழலில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது ‘கோலி.. கோலி..’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.
“போதும் இதோடு இதை முடித்துக் கொள்ளலாம் என இருவரும் சொல்லிக் கொண்டோம்” என ஆட்டத்துக்கு பிறகு நவீன் உல் ஹக் தெரிவித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இருந்து நவீன் உல் ஹக் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Finally Naveen ul haq bow down to Goat Virat Kohli #INDvsAFG pic.twitter.com/AEBFCJ0POX
— ° (@imGurjar_) October 11, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT