Published : 11 Oct 2023 06:51 AM
Last Updated : 11 Oct 2023 06:51 AM
புதுடெல்லி: சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த வாரம் முடிவடைந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதன் முறையாக 28 தங்கம் உட்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: விளையாட்டு வீரர்கள் சிறந்ததைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அரசு அனைத்து தடைகளையும் அகற்றும். ஆசிய விளையாட்டில் நீங்கள் 100 பதக்கங்களைத் தாண்டி விட்டீர்கள். அடுத்த முறை, இந்த சாதனையை நாம் முறியடிக்க வேண்டும். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக உங்கள் சிறந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
இந்தியாவில் திறமைக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்திருக்கிறது. முன்பும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர், ஆனால் அவர்களுக்கு நிறைய தடைகள் இருந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய வீரர்களுக்கு வெளிநாடுகளில் சிறந்த பயிற்சி, வசதிகள், போட்டி கள் கிடைத்து வருகின்றன. எந்த போட்டியில் பங்கேற்றாலும் பதக்கங்களை வெல்கிறோம். இது விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.
நீங்கள் புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கும் புதிய வழிகளைத் திறந்துள்ளீர்கள். இந்த செயல்திறன் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
நமது வீராங்கனைகள் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள், நாட்டில் உள்ள பெண்களின் வலிமையை வெளிப்படுத்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாம் வென்ற பதக்கங்களில் பாதி பெண்கள் வென்றதாகும். டிராக் அண்ட் ஃபீல்டில் அவர்கள், செயல்பட்ட விதம் தங்கப் பதக்கத்தைத் தவிர வேறு எதற்கும் அவர்கள் தயாராக இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 125 விளையாட்டு வீரர்கள் கேலோ இந்தியா திட்டத்தின் தயாரிப்புகளாக இருந்தனர், அவர்கள் 40 பதக்கங்களை வென்றுள்ளனர். இது கேலோ இந்தியா சரியான திசையில் முன்னேறி வருவதைக் காட்டுகிறது.
கேலோ இந்தியாவின் கீழ் 3,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பயிற்சி, மருத்துவம் மற்றும் உணவு, உதவிகளைப் பெறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.25,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், விளையாட்டு வீரர்களுக்காக அரசு கூடுதலாக ரூ.3000 கோடி செலவிடும், மேலும் உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். தற்போதைய இந்திய விளையாட்டு வீரர்கள் சிறந்த திறனை மட்டும் வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவர்கள் பதக்கங்களை விரும்புகிறார்கள். எல்லா காலத்திலும் சிறந்தவர்கள் நீங்கள்தான்.
நாடு போதைப்பொருளுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்தி வருகிறது. அது ஊக்கமருந்துக்கு எதிரான போர். நீங்கள் பள்ளிகளுக்குச் சென்று பதக்கங்களை வெல்வதற்கான சரியான வழி என்ன என்பதை மாணவர்களுக்கு சொல்லவேண்டும், அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். அதில் நீங்கள் பெரும் பங்கு வகிக்க முடியும். போதைப்பொருட்கள் விளைவிக்கும் தீங்குகளை இளைஞர்களுக்குச் சொல்வதை உங்கள் பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT