Published : 10 Oct 2023 07:43 AM
Last Updated : 10 Oct 2023 07:43 AM
ஹைதராபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் லீக்ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இந்த ஆட்டத்தில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாத நிலையில் மொகமது ரிஸ்வான், சவுத் ஷகீல் ஆகியோர் தலா 68 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தனர். மொகமது நவாஷ், ஷதப் கான் ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் பாபர்அஸம் உள்ளிட்ட டாப் ஆர்டர்பேட்ஸ்மேன்கள் பார்முக்கு திரும்பவதில் முனைப்பு காட்டக்கூடும். கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஹைதராபாத்தில் தங்கி உள்ள பாகிஸ்தான் அணியினர் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். மேலும் நெதர்லாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் ஷாகீன் ஷா அப்ரீடி, ஹரிஷ் ரவூஃப், ஹசன் அலி ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும்.
தசன் ஷனகா தலைமையிலான இலங்கை முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சுகடும் சிதைவுக்கு உள்ளாகி இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷா பதிரனா 95 ரன்களையும், கசன் ரஜிதா 90ரன்களையும், மது ஷங்கா 86 ரன்களையும் தாரை வார்த்திருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே 81 ரன்களை வழங்கி இருந்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தீக் ஷனா காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை.
இதனால் இந்த ஆட்டத்திலும் அவர், களமிறங்குவது சந்தேகம்தான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட குஷால் மெண்டிஸ், சரித் அசலங்கா, தசன் ஷனகா ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT