Published : 15 Dec 2017 05:46 PM
Last Updated : 15 Dec 2017 05:46 PM

பேர்ஸ்டோ, மலான் சதத்தில் இங்கிலாந்து 403! - பிரமாதமான பேட்டிங்கினால் அச்சுறுத்தும் ஸ்டீவ் ஸ்மித்

பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதி அற்புத அதிரடி டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி 122 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 92 ரன்களுடன் களத்தில் நின்று இங்கிலாந்தை அச்சுறுத்தி வருகிறார். ஷான் மார்ஷ் 7 ரன்களுடன் இருக்கிறார். முன்னதாக பேங்கிராப்ட், வார்னர் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்டு வெளியேற, உஸ்மான் கவாஜா 50 ரன்கள் எடுத்து எல்.பி.ஆகி வெளியேறினார்.

தேநீர் இடைவேளக்கு சற்று முன்பாக எகிறு பந்து ஒன்றில் கிளவ்வில் அடி வாங்கி சற்றே கோபமடைந்ததைத் தவிர ஸ்மித் இன்னிங்ஸில் அப்பழுக்கில்லை, அவரது மட்டையை பந்தால் கடக்க முடியவில்லை, அதாவது அவராக ஆடாமல் விட்டால்தான் உண்டு, அவர் ஆடி பந்து கடந்து செல்ல முடியவில்லை. மீண்டும் அதே வலது கால் ஆஃப் ஸ்டம்பை நோக்கி பேக் அண்ட் அக்ராஸ் டெக்னிக் அனைத்துப் பந்துகளுக்கும்! இறங்கியவுடனேயே அபாரமான கவர் டிரைவ் பவுண்டரி மூலம் தொடங்கினார், பிறகு நேராக மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி இப்படியே ஆடிச் சென்றார், தற்போது 21-வது டெஸ்ட் சதத்திற்கு அருகில் உள்ளார்.

பேர்ஸ்டோ சதம், இங்கிலாந்து சரிவு!

bairstowjpg100 

இன்று காலை 305/4 என்று தொடங்கியது இங்கிலாந்து, பேர்ஸ்டோ, மலான் கூட்டணி தங்களது 174 ரன் கூட்டணியிலிருந்து தொடங்கி மேலும் 63 ரன்களை சேர்த்து ஆஷஸ் சிறந்த 5-வது விக்கெட் கூட்டணியான 237 ரன்களைச் சேர்த்தனர். இதில் பேர்ஸ்டோ தனது 18 மாதங்களுக்குப் பிறகான முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார், இன்று காலை சிறப்பான பந்து வீச்சு சிலவற்றை எதிர்கொண்டு மீண்டு பிறகு ரன்கள் அடிக்கத் தொடங்கினர்.

மலான் ஒரு எல்.பி.ரிவியூவில் தப்பினார். பேர்ஸ்டோ கண்கவரும் பவுண்டரிகள் சிலவற்றை அடித்தார், கவர் டிரைவ்கள் பிரமாதம். இருவரும் சவுகரியமாக ஆடிவந்த நிலையில் ஆஸ்திரேலியர்கள் பாய்வதற்கான அந்தத் தருணம் நேதன் லயன் பந்தை மலான், லயன் பந்தை ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த் திசையில் மிட், ஆன், மிட்விக்கெட் இடையில் தூக்க நினைத்தார். வெளி விளிம்பில் பட்டு பேக்வர்ட் பாயிண்டுக்குக் கேட்சாகச் சென்றது. பதிலி வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் அட்டகாசமாகக் கணித்து மிகப்பிரமாதமாக எடுத்தார், கடினமான கேட்ச் 237 ரன்கள் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவந்தது. டேவிட் மலான், 227 பந்துகளில் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மொயின் அலி, கமின்ஸின் பேக் ஆஃப் லெந்த், ரவுண்ட் த விக்கெட் பந்தை ஸ்லிப்பில் கேட்சிங் பயிற்சி அளித்து ரன் எடுக்காமல் வெளியேறினார். 3 ஓவர்கள் சென்று கிறிஸ் வோக்ஸ் (8) ஒரு அற்புத கவர் டிரைவுக்குப் பிறகு ஜோஷ் ஹேசில்வுட் பந்தை பைன் லெக்கில் கமின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டெய்ல் எண்டர்கள் முன்னிலையில் ஸ்கோரை உயர்த்த பேர்ஸ்டோ முயன்றார், ஆனால் மிட்செல் ஸ்டார்க் இவரது மிடில் ஸ்டம்பை பறக்க விட்டார். பேர்ஸ்டோ 215 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிறகு ஓவர்டன் விக்கெட்டை பவுன்சரில் வீழ்த்தினார் ஹேசில்வுட். ஸ்டூவர் பிராட் பிறகு ‘பச்’ என்று ஒரு பவுன்சரை அறைய ஸ்கொயர்லெக்கில் 104 மீ சிக்ஸ் ஆனது. ஆனால் 12 ரன்களில் மீண்டும் ஒரு பந்தை ஒதுங்கிக் கொண்டு பைன் லெக்கில் அடிக்கும் முயற்சியில் ஷார்ட் பைன்லெக்கில் முடிந்தார் பிராட். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்து கடைசி 6 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்து 403 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 500 ரன்கள் ஆஸி.க்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.

ஸ்மித் ஆக்ரோஷ இன்னிங்ஸ்:

ஆஸ்திரேலியா தன் இன்னிங்ஸை தொடங்கிய போது ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் தாக்கம் எதுவும் இல்லை, ஆனாலும் வார்னர் நிதானமாகவே ஆடினார், அவர் 36 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஓவர்டனின் அயராத உழைப்புக்கு வெற்றி கிட்டியது. வார்னருக்கு அருமையான ஒரு பந்தை மிகச்சரியாக ஓவர் த விக்கெட்டிலிருந்து ஆங்கிள் செய்து சற்றே பந்து நேராக வார்னர் மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் கையில் உட்கார்ந்தது.

பேங்கிராப்ட் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு நன்றாகத்தான் ஆடினார், ஆனால் கூர்மையான இன்ஸ்விங்கரை வைட் ஆப் த கிரீசிலிருந்து வீச கால்காப்பில் வாங்கினார், இங்கிலாந்து ரிவியூவில்தான் அவுட் தீர்ப்பு வெளியானது.

உஸ்மான் கவாஜா இறங்கியவுடனேயே கட் அண்ட் பவுல்டு ஆகியிருப்பார், பந்து ஓவர்டன் விரல்களில் பட்டுச் சென்றது. பிறகு 28 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஸ்லிப்பில்

ஸ்மித், கவாஜா கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்த்தனர். ஸ்மித் இறங்கியது முதலே தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளை அடித்தார். முதல் கவர் டிரைவ், பிறகு ஒரு ஆஃப் டிரைவ், பின்னங்காலில் சென்று ஆஃப் திசையில் பஞ்ச், பிளிக் ஷாட்கள், ஒன்றிரண்டுகள் என்பதோடு பிராட் ஒருமுறை குத்தி எழுப்பிய பந்தை ஃபைன் லெக்கில் ஹூக் செய்து ரசிகர்கள் பகுதிக்கு சிக்ஸருக்கு அனுப்பினார். 58 பந்துகளில் அரைசதம் கண்டார், பிறகும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 122 பந்துகளில் 92 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். மார்ஷ் 7 ரன்களுடன் உள்ளார். ஆஸ்திரேலியா 203/3 என்று இரண்டாம் நாளை முடிதுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x