Published : 09 Oct 2023 03:13 PM
Last Updated : 09 Oct 2023 03:13 PM
சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி கொடுத்த கேட்ச்சை மிட்செல் மார்ஷ் தவறவிட்டபோது பயத்தில் டிரெஸ்ஸிங் அறையை விட்டு வெளியேறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் 200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் (0) ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா (0), ஸ்ரேயஸ் ஐயர் (0) ஆகியோர் ஆட்டமிழக்க மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது.
2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது. விராட் கோலி 12 ரன்களில் இருந்த போது ஜோஸ் ஹேசில்வுட் வீசிய ஷார்ட் பாலை விளாச முயன்றார். ஆனால், பந்து மட்டை விளிம்பில் பட்டு உயரமாக சென்றது. மிட்விக்கெட் திசையில் இருந்து ஓடி வந்து பிடிக்க முயன்ற மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். இந்த வாய்ப்பை விராட் கோலி பயன்படுத்திக் கொண்டார்.
பரபரப்பான இந்த நிமிடங்களில் அணிக்குள் ஏற்பட்ட பயத்தை விவரித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். போட்டி முடிந்த பிறகு பேசிய அஸ்வின், "விராட் கோலி பந்தை காற்றில் அடிக்கவும் டிரெஸ்ஸிங் அறையை விட்டு நான் ஓடிவிட்டேன். அவர் அவுட் ஆகிவிடுவாரா என்ற பயத்தில் முழுவதுமாக அறையை விட்டு வெளியேறிவிட்டேன். பயத்துடன் அந்த கேட்சை பார்த்தேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது அப்படியான உணர்வு. எல்லாம் முடிந்ததும் என்னை கூப்பிடுங்கள் என்பது போல் இருந்தது அந்த தருணம்.
இதுபோன்ற பெரிய கேம்களில்தான் நம்மை நாம் கண்டுபிடிக்க முடியும். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்று வரும்போது நிச்சயம் அது சிறிய ஆட்டமாக இருக்காது. அவர்களை 199 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து நல்ல பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்திய இதுமாதிரியான ஆட்டத்தில் விராட் கோலி இப்படி அவுட்டானால் நாம் ஆட்டத்தைவிட்டே வெளியேற வேண்டிவரும்.
கோலி விக்கெட்டின் முக்கியத்துவம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சக வீரர்களுக்கும் நன்றாகவே தெரியும். விராட் கோலி அவுட் பயத்தை காண்பித்த பிறகு மொத்த மேட்ச்சையும் நான் ஒரே இடத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் ஒரே இடத்தில் நின்றதற்கு என் கால்கள் இப்போது வலிக்கிறது" என விவரித்துள்ளார்.
12 ரன்களில் இருந்த இருந்த கோலியின் கேட்சை தவறவிட்டதற்கான விலையை ஆஸ்திரேலியா கொடுத்தது. இக்கட்டான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 165 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 116 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT