Published : 09 Oct 2023 09:02 AM
Last Updated : 09 Oct 2023 09:02 AM
தர்மசாலா அழகான இயற்கைப் பசுமைப் பின்னணியில் மலைவாசஸ்தலமாக விளங்கும் இடமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர்கள் மேலே உள்ளது தர்மசாலா. ஆகவே, இங்கு பந்துகளை அடித்தால் பறக்கும். ஆனால், இப்போது எழுந்துள்ள சர்ச்சை அவுட் ஃபீல்டில் புல்வெளி சமச்சீராக இல்லாமல் இடைவெளி நிரம்பியதாகவும், அவுட் ஃபீல்டில் பல இடங்கள் பாசி பிடித்து பீல்டர்களுக்கு அபாயகரமானதாகவும் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இங்கிலாந்து வீரருமான ஜானதன் ட்ராட் சனிக்கிழமை ஆப்கன் பீல்டர் முஜிபுர் ரஹ்மான் புல்லற்ற மண் அடர்ந்த அவுட்ஃபீல்டில் டைவ் அடித்து பீல்ட் செய்ய முயற்சித்தபோது இடது முழங்கால் மண்ணுக்குள் புதைந்ததாக புகார் தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை. ஆனால், ஆர்வமிக்க பீல்டர்கள் அவுட் ஃபீல்டின் தன்மை தெரியாமல் சாகசம் செய்ய நினைத்தால் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையையே காலி செய்து விடும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் - வங்கதேச போட்டியில் நிறைய பீல்டர்கள் அவுட் ஃபீல்டில் கால்களை சரியாக ஊன்ற முடியாமல் தவறி விழுந்ததையும் சமாளித்து எழுந்ததையும் பார்க்க முடிந்தது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி கடைசி தறுவாயில் தர்மசாலாவிலிருந்து மாற்றப்பட்டது. வெளிக்களம் ஏன் இப்படி ஆகிறது என்பதற்கு பிசிசிஐ, ‘கடும் குளிர்காலம் தான் காரணம்’ என்று கூறியது.
மேலும், கடந்த மாதம் ஐசிசி ஆய்வுக்குழு நிபுணர்கள் தர்மசலாவை ஆய்வு செய்தபோது பூஞ்சைக்காளான் தொற்று படிந்திருப்பதாக கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனாலும் ஏன் இங்கே போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டது ஐசிசி என்பது தெரியவில்லை. மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரின் சொந்த மாநிலம் அவர் தலைமை வகிக்கும் ஹிமாச்சல் கிரிக்கெட் வாரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜானதன் ட்ராட் கூறும்போது, பீல்டர்கள் டைவ் அடித்து பீல்டிங் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையிலும் இப்போது பீல்ட்ர்கள் டைவ் அடித்தே பந்தை தடுக்க வேண்டியுள்ளதாலும் டைவ் அடித்தால் காயம் ஏற்படும் என்ற பயம் இருந்தால், எப்படி டைவ் அடிப்பார்கள்? எனவே, ஐசிசி இந்த மைதானம் மட்டுமல்ல மற்ற மைதானங்களின் அவுட் ஃபீல்டின் தரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அன்று அகமதாபாத்தில் டெவன் கான்வேவுக்கும் இதே சிக்கல் ஏற்பட்டது. எனவே, நிச்சயமாக இந்திய அவுட் ஃபீல்ட்களின் தரங்களை ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
ஆட்ட நாயகன் மெஹதி ஹசன் மிராஸும் அவுட் ஃபீல்ட் மிகவும் ஹெவியாக உள்ளது என்றார். பங்களாதேஷ், இங்கிலாந்து போட்டியும் தர்மசாலாவில்தான் நடைபெறுகிறது. இரு அணிகளுமே தர்மசாலா போட்டியில் வீரர்கள் காயமடைந்து உலகக் கோப்பையில் இருந்தே விலகும் அபாயம் இருப்பதாக அஞ்சுவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இங்கிலாந்துக்கு இந்த மைதானம் மிகவும் பிடித்த மைதானம். இயற்கை எழிலை ரசிப்பதுடன், பந்துகள் ஸ்விங் ஆகும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால், ஒரே பயம் பாசி பிடித்த அவுட் ஃபீல்ட், பூஞ்சைக்காளான் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள ஒரு அவுட் ஃபீல்டை இமாச்சல கிரிக்கெட் சங்கம் சரி செய்யுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT