Published : 09 Oct 2023 07:15 AM
Last Updated : 09 Oct 2023 07:15 AM
சென்னை: செஸ் ஒலிம்பியாட் மற்றும் உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்த அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு செஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் முதலில் ஐஎம் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) ஆக வேண்டும். இதற்கு ஃபிடேவின் 3 நார்ம்ஸ்களை பெற வேண்டும். இதனால் முதற்கட்டமாக தமிழக வீரர்கள் பயன் பெறும் வகையில் ஐஎம் ஆவதற்கான தேவையான நார்ம்ஸ்களை பெறும் வகையில் செஸ் தொடர்களை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வகையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு செஸ் சங்கத்தின் தலைவர் எம்.மாணிக்கம், செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி ஆகியோர் ‘இந்து தமிழ் திசையிடம்’ கூறியதாவது:
நமது வீரர்கள் ஐஎம் நார்ம்ஸ்களை பூர்த்தி செய்வதற்காக வருடத்திற்கு 50 தொடர்கள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக 10 தொடர்களை வரும் 16-ம் தேதி முதல் டிசம்பர் 22 வரை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒவ்வொரு தொடரிலும் 5 வெளிநாட்டு வீரர்கள், 5 உள்நாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள். வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் கிராண்ட் மாஸ்டர்ஸ், சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் வென்றவர்களாக இருப்பார்கள். சர்வதேச மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வெல்லும் நோக்கில் முனைப்புடன் விளையாடி வரும் தமிழக வீரர்களின் கனவை நனவாக்குவது எங்களது நோக்கம்.
அதிக தொடர்கள் நடத்துவதன் மூலம் நமது வீரர்கள் ஐஎம் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார். 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நமது வீரர்கள் ஐஎம் ஆக வேண்டும். அதன் பின்னர்தான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நோக்கி நகர்ந்து செல்ல முடியும்.
ஐஎம் ஆக வேண்டுமானால் 2,400 ரேட்டிங் புள்ளிகள் மற்றும் 3 நார்ம்ஸ்களை பெற்றிருக்க வேண்டும். இந்த நார்ம்ஸ்களை அடைவதற்காகவே தமிழ்நாடு செஸ் சங்கம் போட்டிகளை முன்னெடுத்துள்ளது. இந்த நார்ம்ஸ்களை அடைவதற்காக தமிழக வீரர்கள் ஸ்பெயின், ஹங்கேரி போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விளையாடுகிறார்கள். இதற்காக அவர்கள், ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை நிதியை செலவிட வேண்டிய நிலை இருக்கிறது.
நமது வீரர்கள் அதிக அளவில் நிதியை ஏன் செலவழிக்க வேண்டும். அதற்கு பதிலாக நமது வீரர்கள் பலன் அடையும் வகையில் நாமே, ஐஎம் நார்ம்ஸ்களை அடைவதற்கான செஸ் தொடர்களை நடத்தலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். 50 தொடர்களை நடத்தினால்தான் குறைந்தது 10 முதல் 15 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க முடியும்.
இந்த தொடரை நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். ஒரு தொடரை நடத்துவதற்கு ரூ. 8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும். போட்டி தொடர்பான வரைவு திட்டத்தை அரசிடம் கொடுத்துள்ளோம். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஸ்பான்சர் வழங்கக்கோரி அனுகியுள்ளோம். சென்னையில் வரும் 16-ம் தேதி நடைபெறும் போட்டியில் கிராண்ட் மாஸ்டர், சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டங்கள் வென்ற ரஷ்யா, அஜர்பைஜான், கஜகஸ்தான், துர்கிஸ்தான் உள்ளிட்ட 5 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடுகிறார்கள்.
இவர்களுடன் நமது வீரர்கள் 5 பேர் பங்கேற்பார்கள். இதில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 2 பேர் அகில இந்திய அளவில் இருந்து பங்கேற்பார்கள். ஐஎம் நார்ம்ஸ்களை பூர்த்தி செய்ய சில புள்ளிகளே தேவையாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளோம். ஒரு நார்ம்ஸ், 2 நார்ம்ஸ்களை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் இந்த தொடரில் விளையாடும் போது அவர்கள் ஐஎம் நார்ம்ஸ்களை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.
பொள்ளாச்சி, மதுரை, கொடைக்கானல்,கோவை, ஈரோடு, சேலம், சிவகாசி ஆகிய பகுதிகளிலும் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். போட்டிகள் திங்கள் கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறும். ஞாயிற்றுகிழமை தவிர அனைத்து நாட்களிலும் போட்டி இருக்கும். இந்தத் தொடர் முடிவடைந்ததும் டிசம்பர் 23ம் தேதி மதுரையில் ஓபன் செஸ் தொடர் நடத்த உள்ளோம். இந்த தொடர் 30ம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 15-வது முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் 30 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள். இதில் பங்கேற்கும் நமது வீரர்கள் ஐஎம் நார்ம்ஸ்களை பூர்த்தி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக 50 தொடர்களை நடத்துவதற்கு ரூ.5 கோடி வரை செலவாகும். அந்த வகையில் ஒவ்வொரு தொடருக்கும் தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் வழங்குவதற்கு இசைவு தெரிவித்துள்ளனர். இந்த வகையில் ரூ.2.50 கோடி கிடைக்கும். மீதி தொகையை ஸ்பான்சர்கள் மூலம் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளோம். இந்த தொடர்களில் கலந்துகொள்வதற்கு நமது வீரர்களுக்கு பதிவு கட்டணம் குறைந்த அளவில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT