Published : 08 Oct 2023 05:50 AM
Last Updated : 08 Oct 2023 05:50 AM
புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
டெல்லி அருண் ஜேட்லிமைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. குயிண்டன் டி காக் 84 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 100 ரன்களும், ராஸிவான் டெர் டஸ்ஸன் 110 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
4-வது வீரராக களமிறங்கிய எய்டன் மார்க்ரம்49 பந்துகளில், 3 சிக்ஸர்கள்,14 பவுண்டரிகளுடன் சதம்விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் அயர்லாந்தின் கெவின் ஓ’பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 54 பந்துகளில், 106 ரன்கள் எடுத்து தில்ஷன் மதுஷங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின்பந்து வீச்சில் மதீஷா பதிரனா 10 ஓவர்களில் 95 ரன்களை தாரை வார்த்தார்.
429 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 44.5 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சரித் அசலங்கா 65 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், குஷால் மெண்டிஸ் 42 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், கேப்டன் தசன்ஷனகா 68 ரன்களும் சேர்த்தனர். 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 புள்ளிகளை பெற்றது. தென் ஆப்பிரிக்கஅணி தரப்பில் ஜெரால்டுகோட்ஸி 3 விக்கெட்களையும், மார்கோ யான்சன், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அன்று 99 - இன்று 428: இந்திய ஆடுகளங்களில் டெல்லி மைதானம் வழக்கமாக மந்தமாகவே இருக்கும். இதே மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. ஆனால் தற்போது 428 ரன்களை வேட்டையாடி சாதனை படைத்துள்ளது.
3 சதம்: இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குயிண்டன் டி காக், ராஸி வான் டெர் டஸ்ஸன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சதம் விளாசினார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் 3 சதங்கள் அடிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
ஆஸி. சாதனை தகர்ப்பு: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்களை வேட்டையாடியது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இது அதிகபட்ச ரன்குவிப்பாக அமைந்தது. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு உலகக் கேப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 6 விக்கெட்கள் இழப்புக்கு 417 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதை தென் ஆப்பிரிக்கா தற்போது முறியடித்துள்ளது. மேலும் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா 400 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 3-வது முறையாகும்.
ஆப்கானிஸ்தான் தோல்வி: தரம்சாலாவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 37.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 47 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். எளிதான இலக்கை துரத்திய வங்கதேசம் 34.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மெஹிதி ஹசன் 57, நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 59 ரன்கள் விளாசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT