Published : 08 Oct 2023 12:40 AM
Last Updated : 08 Oct 2023 12:40 AM
டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
429 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா 7 ரன்களுக்கு அவுட் ஆனாலும், குசல் மெண்டிஸ் 76 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். அதேபோல் சரித் அசலங்கா 79, தசுன் ஷனகா 68, கசுன் ராஜிதா 33, சதீர சமரவிக்ரம 23 ரன்கள் எடுத்து உதவினர். ஆனால், தனஞ்ஜெயா டி சில்வா 11, மதீஷா பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் என மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதுடன் விரைவாக விக்கெட்டையும் பறிகொடுத்தனர். இதனால் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டும், கேசவ் மகாராஜ், ரபாடா, மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்: டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை குயின்டன் டி காக், தெம்பா பவுமா இணை தொடங்கியது. இதில் தில்ஷான் மதுஷங்கா வீசிய இரண்டாவது ஓவரில் தெம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டானார்.
அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென், குயிட்டன் டி காக்குடன் கைகோக்க இருவரும் இலங்கையின் பந்துவீச்சை விளாசித்தள்ளினர். கிட்டதட்ட 30 ஓவர்கள் வரை அடித்து துவம்சம் செய்த இந்த இணையை 31-வது ஓவரில் மதீஷா பதிரனா பிரித்தார். இதில் 84 பந்துகளில் 100 ரன்களை குவித்த டி காக் அவுட்டாகி வெளியேறினார்.
110 பந்துகளில் 108 ரன்களை குவித்து அதிரடி காட்டிய ரஸ்ஸி வான் வான் டெர் டுசென் விக்கெட்டை துனித் வெல்லலகே கைப்பற்ற 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 291 ரன்களை குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களில் அவுட்டானாலும், ஐடன் மார்க்ராம் 3 சிக்சர்களை விளாசி நிலைத்து நின்று ஆடினார். ஐடன் மார்கன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சிறிதுநேரத்தில் அவர் விக்கெட்டை தில்ஷான் மதுஷங்கா கைப்பற்ற 106 ரன்களுடன் கிளம்பினார்.
தென்னாப்பிரிக்கா வீரர்கள் இலங்கையை விடுவதாக இல்லை. 49-வது ஓவரில் டேவிட் மில்லர் 3 சிக்சர்களை விளாசி வான வேடிக்கை காட்ட, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 438 ரன்களை குவித்தது. டேவிட் மில்லர் 39 ரன்களுடனும், மார்கோ ஜான்சன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரனா, துனித் வெல்லலகே தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT