Published : 07 Oct 2023 04:52 AM
Last Updated : 07 Oct 2023 04:52 AM

Asian Games 2023 | ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

இந்திய அணி சார்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும் (59 மற்றும் 32-வது நிமிடம்), அபிஷேக்(48-வது நிமிடம்), அமித் ரோஹிதாஸ் (36-வது நிமிடம்), மன்பிரீத் சிங் (25-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெற்றது.

4-வது முறை: ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிதங்கப் பதக்கம் வெல்வது இது4-வது முறை. இதற்கு முன்பு 1966,1998, 2014-ம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 13 கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த தொடரில் இந்தியஅணி ஒரு ஆட்டத்தில்கூட தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கிரிக்கெட்டில் வெற்றி: ஆடவருக்கான டி-20 கிரிக்கெட் அரை இறுதி சுற்றில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அனிக் ஜா 24, இமோன் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் சாய் கிஷோர் 3, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், திலக் வர்மா 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசினர். இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியின் 13-வது நாளான நேற்று பதக்கபட்டியலில் இந்தியா 22 தங்கம்,34 வெள்ளி, 39 வெண்கலம் என 95 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது.

இன்னும் 2 நாட்கள் போட்டி உள்ளதால் இந்திய அணி 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து சாதனை படைப்பது உறுதியாகி உள்ளது. கபடியில் 2 பதக்கம், வில்வித்தையில் 3 பதக்கம், பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம், ஆடவர் கிரிக்கெட்டில் பதக்கம்ஆகியவற்றை இந்தியா கைப்பற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட உள்ளது. மல்யுத்தத்தில் 4 பேர் கலந்து கொள்ளும்போட்டியும் இருக்கிறது.

ஆசிய விளையாட்டு வரலாற்றில் அதிகபட்சமாக 2018-ல் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்றது. தற்போது முதல்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று சாதனை படைக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x