Published : 05 Oct 2023 11:37 PM
Last Updated : 05 Oct 2023 11:37 PM
அகமதாபாத்: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியை நேரில் பார்க்க மைதானத்துக்கு வந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பெரும்பாலான பார்வையாளர் மாடங்கள் காலியாக இருந்தன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது. வரும் நவம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இரு முறை பட்டம் வென்றுள்ள இந்தியா, தலா ஒரு முறை வாகைசூடி உள்ள பாகிஸ்தான், இலங்கை, கடந்த இரு முறையும் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள் என்ற முறையில் இந்த இரு அணிகளும் முதல் போட்டியில் விளையாடின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையாளர்களின் எண்ணிக்கை மந்தம்: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக நரேந்திர மோடி மைதானம் அறியப்படுகிறது. சுமார் 1,10,000 பேர் ஒரே நேரத்தில் இந்த மைதானத்தில் நேரடியாக போட்டியை பார்த்து ரசிக்க முடியும். இந்த சூழலில் இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையிலான போட்டிக்கு மொத்தமாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான பார்வையாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதுவும் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தபோது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே மைதானத்தில்தான் வரும் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான லீக் போட்டி மற்றும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT