Published : 05 Dec 2017 04:05 PM
Last Updated : 05 Dec 2017 04:05 PM
டெல்லியில் கடுமையாக காற்றில் மாசு அதிகரித்துள்ளதால் இலங்கை வீரர் இன்று மைதானத்திலேயே வாந்தி எடுத்து பிறகு பெவிலியன் திரும்பியுள்ளார்.
இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ் நடைபெற்று கொண்டிருந்த போது சுரங்க லக்மல் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார். இலங்கை உடற்தகுதி நிபுணர் உடனே களத்துக்குள் விரைந்து லக்மலை அழைத்துச் சென்றார்.
ஞாயிறன்று சுற்றுச்சூழல் மாசு காரணமாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு கமகேவும் பெவிலியன் திரும்பினார்.
இனி டெல்லியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டுமெனில் சுற்றுச்சூழல் முன்னேற்றம் அடைந்தால்தான் வாய்ப்பு என்ற ரீதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இன்றும் கூட மூக்கு, வாய் ஆகியவற்றை துணியால் மூடியபடிதான் இலங்கை வீரர்கள் பலர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இன்று இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தினேஷ் சந்திமால் 164 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மாவிடம் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அஸ்வின், இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்திய அணி தன் 2-வது இன்னிங்ஸில் 246/5 என்று டிக்ளேர் செய்தது. ஷிகர் தவண் 67 ரன்களை எடுக்க, ரஹானே மீண்டும் சொதப்பி 10 ரன்களில் தூக்கி அடித்து அவுட் ஆனார். புஜாரா 49 ரன்களை எடுக்க விராட் கோலி 50 ரன்களையும், ரோஹித் சர்மா 50 ரன்களையும் எடுத்தனர். 410 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இலங்கை அணி சமரவிக்ரமா விக்கெட்டை மொகமது ஷமியின் ஆக்ரோஷ பவுன்சருக்கு இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT