Published : 01 Dec 2017 08:02 PM
Last Updated : 01 Dec 2017 08:02 PM

ஸ்மித்தை வீழ்த்த முடியுமா? ஜோ ரூட் எல்.பி.யிலிருந்து தப்பிப்பாரா? சனிக்கிழமை அடிலெய்ட் டெஸ்ட்

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆட்டமிழந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததையடுத்து ஏகப்பட்ட சிக்கல்களுடன் இங்கிலாந்து அணி நாளை (சனிக்கிழமை) அடிலெய்டில் பகலிரவு, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து பந்து வீச்சின் பெரும் பிரச்சினை ஸ்டீவ் ஸ்மித், பிரிஸ்பனில் தனது சாகச சதத்தினால் இங்கிலாந்தை முறியடித்தார். இங்கிலாந்து வீச்சாளர்களுக்கு அவரை வீழ்த்தும் முறை தெரியவில்லை.

அவர் விரைவாக ரன்களைக் குவிப்பவர் என்று அவரைக் கட்டுப்படுத்த களவியூகம அமைக்க அவரோ பின்னங்காலில் சென்று அனைத்துப் பந்துகளையும் எதிர்கொண்டு இங்கிலாந்தை விழிபிதுங்கச் செய்தார்.

இவரைப்போன்ற வீரர்களை வெறுப்பேற்ற முடியாது, எனவே அவரை அதிகப் பந்துகளை மட்டையில் ஆட வைக்க வேண்டும், இந்த நடைமுறையில் அவர் அவுட் ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கிலாந்தில் துரதிர்ஷ்டவசமாக தரமான ஸ்பின்னர் ஒருவர் கூட இல்லை. அதிவேகம் வீசும் வீச்சாளர்களும் இல்லை, ஜேக் பால், கிறிஸ் வோக்ஸ் பந்துகளை விரயம் செய்தனர்.

இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்மித்தை விரைவில் வீழ்த்த திட்டம் தயார் என்று கூறியிருக்கிறார், இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இங்கிலாந்துக்கு இன்னொரு பிரச்சினை என்னவெனில் டேவிட் வார்னர், பேங்கிராப்ட் டச்சுக்கு வந்துவிட்டனர். எனவே இங்கிருந்தே இங்கிலாந்து பவுலர்களுக்கு சிக்கல்கள் தொடங்கிவிட்டன.

பேட்டிங்கில் ஜோ ரூட் காலை முன்னால் நீட்டி ஆடும் பழக்கமுடையவர் ஆதலால் ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ் ஆகியோர் வேகமாக இன்ஸ்விங்கர், அல்லது இன்கட்டர்களை வீசி அவரது கால்காப்பைத் தாக்கி எல்.பி.செய்கின்றனர். ஜோ ரூட் முன்னதாக கமிட் ஆகாமல் பந்து வந்தவுடன் ஆடினால் மட்டுமே இதற்கு தீர்வு பிறக்கும். இங்கிலாந்து அதிக ஸ்கோர்களை குவிக்க வேண்டுமெனில் அலிஸ்டர் குக், ஜோ ரூட் பெரிய சதங்களை எடுப்பது அவசியம். குக், ரூட் ஆட்டம் அடிலெய்டில் வலுப்பெறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதே போல் இங்கிலாந்தின் பின் கள வீரர்கல் ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளை இன்னும் சிறபாக எதிர்கொண்டு ஆடுவதும் அவசியம்.

பிங்க் பந்து... அடிலெய்ட் பிட்ச்:

பகலிரவு போட்டி என்பதால் மாலை வேளை தொடங்கி பந்துகள் ஸ்விங் ஆகத் தொடங்கும் அதனால் இங்கிலாந்து ஸ்விங் பவுலர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பிட்ச் கொஞ்சம் ஹார்டாக உள்ளது, வேகம், பவுன்ஸ், ஸ்பின் என்று அனைத்திற்கும் ஆதரவு இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். சூழ்நிலைகள் இங்கிலாந்து ஸ்விங் பவுலிங்குக்குச் சாதகமாக அமையும் இந்தக் காலக்கட்ட்டத்தை ஜோ ரூட் சிறப்பாகத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவை கொத்தாக வீழ்த்த வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தை விரைவில் வீழ்த்தினால் சரசரவென சரியும் தன்மை கொண்டது, அதனை இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது.

இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் ஓவர்ட்டன் சேர்க்கப்பட்டுள்ளார், ஆஸ்திரேலியா அணியில் மாற்றமில்லை.

எதிரணியினரை கேலி கிண்டல் செய்து அதில் வெற்றி ருசி கண்ட ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற முன்னிலையில் மேலும் சலங்கை கட்ட்டி ஆடுவார்கள், இங்கிலாந்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் மூன்றையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது, இங்கிலாந்து மே.இ.தீவுகளை பகலிரவு டெஸ்டில் வீழ்த்தியுள்ளது, இந்தப் போட்டியில் அலிஸ்டர் குக் 243 ரன்களை எடுத்தார், நிச்சயம் குக் ஆடினால்தான் ஆஸ்திரேலியா கவலைப்படும்.

இந்திய நேரம் காலை 9 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது, சோனி சிக்ஸ் சானலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x