Published : 02 Oct 2023 09:50 PM
Last Updated : 02 Oct 2023 09:50 PM
இந்திய கிரிக்கெட்டின், உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரகளில் இருவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி. சாதனை மன்னனாகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை உடைக்கும் நெருக்கத்தில் இருக்கிறார் விராட் கோலி. இருவரும் சேர்ந்து ஆடியிருந்தாலும் இருவரும் கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டத்துக்குரியவர்களே.
சச்சின் அதிக சதங்கள் (100), அதிக ரன்கள் என்று சாதனையை வைத்திருப்பவர் என்றால் விராட் கோலி அதிவேகமாக 10,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்தவர், விரட்டல் மன்னன் என்ற அளவுக்கு பல போட்டிகளில் இந்திய அணியை எந்த இலக்காக இருந்தாலும் விரட்டி வெற்றிபெறச் செய்துள்ளார். 2011 உலகக்கோப்பை தொடரில் இருவரும் சேர்ந்து ஆடினர். 2011 உலகக்கோப்பை சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பை என்பதால் அவருக்காக உலகக்கோப்பையை வெல்ல இந்தியா கடுமையாகப் பயிற்சி செய்து கடைசியில் வென்றது, அப்போது சச்சின் டெண்டுல்கரை யுவராஜ் சிங் முன்னெடுப்பில் வீரர்கள் தோளில் சுமந்து மைதானம் முழுவதும் சுற்றி வந்தனர்.
அதே போல் இப்போது 2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது, இதில் இந்தியா வென்றால் எப்படி சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்து மைதானத்தைச் சுற்றி வந்தோமோ அதே போல் விராட் கோலியை தோளில் சுமந்து சுற்றி வர வேண்டும் என்று விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் விரேந்திர சேவாக் கூறும்போது, “2019 உலகக்கோப்பைத் தொடரில் சீக்கூ (கோலி) ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இந்த உலகக்கோப்பையில் சதங்களை அடித்து அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கிறேன். அப்போது விராட் கோலியை மற்ற வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தை வலம் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். 2011 உலகக்கோப்பையின் போதே ரோஹித் சர்மா அணிக்குள் வந்திருக்க வேண்டும், ஆனால் நூலிழையில் வாய்ப்பு நழுவியது. இப்போது ஒருநாள் கிரிக்கெட்டின் மன்னராகத் திகழ்கிறார். ஒரு சிறந்த வீரர் என்பதாலேயே உலகக்கோப்பையை வெல்ல தகுதி பெற்றவர் என்றே நான் கருதுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் விரேந்திர சேவாக்.
இந்திய உலகக்கோப்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் , முகமது ஷமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT