Published : 01 Oct 2023 05:49 AM
Last Updated : 01 Oct 2023 05:49 AM
ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.
ஹாங்சோ நகரில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருத்துஜா போஸ்லே ஜோடி 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் என் ஷுவோ லியாங்-டிசுங்ஹாவோ ஹுவாங் ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து ரோகன் போபண்ணா, ருத்துஜா ஜோடி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
தமிழக வீரர் அசத்தல்: இதேபோல் ஸ்குவாஷ் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் தமிழக வீரர் சவுரவ் கோஷல், அபய் சிங், மகேஷ் மங்காவ்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
முதல் ஆட்டத்தில் விளையாடிய மகேஷ் மங்காவ்கர் 8-11, 2-11. 3-11 என்ற செட் கணக்கில் பாகிஸ்தான் வீரர் இக்பால் நாசிரிடம் வீழ்ந்தார். இதையடுத்து 2-வது ஆட்டத்தில் விளையாடிய சவுரவ் கோஷல் 11-5, 11-1, 11-3 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிம் கானைச் சாய்த்தார். 3-வதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங்கும், பாகிஸ்தான் வீரர் ஜமானும் மோதினர். இதில் அபய் சிங் 11-7, 9-11, 8-11, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் ஜமானை போராடி வீழ்த்தினார். இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கத்தை வென்றது.
சுதிர்தா-அய்ஹிகா சாதனை: மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி ஜோடி சீனாவின் சென் மெங், இதி வாங் ஜோடியை 11-5, 11-5, 5-11, 11-9 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதேநேரத்தில் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, சீனாவின் இதி வாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
இதேபோல் டேபிள் டென்னிஸின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா-மானவ் தாக்கர் ஜோடி 8-11, 11-7, 10-12, 11-6, 9-11 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் வூஜின் ஜாங்-தாங்கூன் லிம் ஜோடியிடம் வீ்ழ்ந்தது.
மீராபாய் சானு 4-வது இடம்: பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 4-வது இடம் பிடித்து வெளியேறினார்.
துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளி: நேற்று நடைபெற்ற கலப்பு அணிப் பிரிவில் சரப்ஜோத் சிங், டி.எஸ்.திவ்யா ஆகியோர் அடங்கிய இந் திய அணி 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜாங் போவன், ஜியாங் ரான்ஜின் ஜோடியிடம் வீழ்ந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
குத்துச்சண்டை: குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் ஜாயினா ஷெகர்பெ கோவாவை
வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மகளிர் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெயின் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் சியோங் சுயோனை சாய்த்தார்.
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 2 பதக்கம்: ஆடவர் பிரிவு 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் கார்த்திக் குமார் 28 நிமிடங்கள் 15.38 விநாடிகளில் 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கமும், குல்வீர் சிங் 28 நிமிடங்கள் 17.21 விநாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதே போட்டியில் பஹ்ரைன் வீரர் பிர்ஹானு 28 நிமிடங்கல் 13.62 விநாடிகளில் முதலாவதாக வந்து தங்கம் வென்றார். 7-வது நாளான நேற்று வரை இந்தியா 10 தங்கம், 14 வெள்ளி 14 வெண்கலம் என 38 பதக்கங்களை வென்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT