Published : 30 Sep 2023 02:37 PM
Last Updated : 30 Sep 2023 02:37 PM
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் இடம்பெற்றார். இந்தச் சூழலில் அஸ்வினை சமாளிக்க அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பித்தியாவை நெட் பவுலராக அழைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். ஆனால், அவரோ அதனை மறுத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், அக்டோபர் 8-ம் தேதி அன்று சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடுகின்றன. அஸ்வின், சென்னையை சேர்ந்தவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசும் திறன் படைத்தவர். அதனால் அவர் ஆடும் லெவனில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்தச் சூழலில் பயிற்சி ஆட்டத்துக்காக திருவனந்தபுரத்தில் முகாமிட்டுள்ள ஆஸ்திரேலிய அணி, மகேஷ் பித்தியாவை நெட் பவுலராக அழைத்துள்ளது. இவர் ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணமாக வந்திருந்த ஆஸ்திரேலிய அணிக்கு நெட் பவுலராக உதவியிருந்தார். அஸ்வினை நகல் எடுத்தது போல பந்து வீசும் திறன் படைத்த வீரர். அதனால் அவரை எதிர்கொண்டால் அது உலகக் கோப்பை தொடருக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும் என்பது ஆஸி.யின் கணக்கு. முக்கியமாக வார்னர், லபுஷேன், ஸ்மித் போன்ற வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறுவார்கள். அண்மையில் முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் இதற்கு உதாரணம்.
உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இல்லாதபோதே மகேஷ் பித்தியாவுக்கு தயாராக இருக்குமாறு ஆஸி. தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அஸ்வின், இந்திய அணியில் இடம் பிடித்ததும் மகேஷ் பித்தியாவை ஆஸி. அழைத்துள்ளது. ஆனால், அவர் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் பரோடா அணிக்காக விளையாடும் நோக்கில் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
“சர்வதேச அணியுடன் பணியாற்றுவது நல்லதொரு அனுபவம் தான். அஸ்வின், இந்திய அணியில் அறிவிக்கப்பட்டதும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் எனது கவனம் இருப்பதால் மறுத்துவிட்டேன். பரோடா அணிக்காக விளையாடுவது தான் எனது விருப்பம்” என மகேஷ் பித்தியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT