Published : 29 Sep 2023 06:00 PM
Last Updated : 29 Sep 2023 06:00 PM
கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு அறிவித்திருந்த தமிம் இக்பால் பிறகு வங்கதேச பிரதமரின் தலையீட்டினால் ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் ஆட வந்தார். இந்நிலையில், இவருக்கும் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கும் மோதல் முற்றியதால், தமிம் இக்பாலை அணியில் சேர்க்க ஷாகிப் விரும்பவில்லை என்ற விவகாரம் பெரிய சர்ச்சைகளை அங்கு கிளப்பியுள்ளது.
அதாவது, தமிம் இக்பால் உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் மட்டும்தான் ஆட முடியும் என்று கூறியதாகவும், ஃபிட்னெஸ் இல்லாதவரை எடுக்கக் கூடாது என்றும், மீறி எடுத்தால் தான் உலகக் கோப்பை அணியிலிருந்தே விலகிவிடுவேன் என்றும் ஷாகிப் மிரட்டியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தமிம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னை மிடில் ஆர்டரில் இறங்க ஷாகிப் வலியுறுத்தியதாகவும், 5 போட்டிகளில் மட்டுமே ஆட முடியும் என்று தான் கூறவே இல்லை என்றும், சமூக ஊடகத்தில் வெளியிட, ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பாலை ‘சிறுபிள்ளைத்தனமானவர்’ என்று சாடியுள்ளார்.
இது தொடர்பாக தமிம் வெளியிட்ட வீடியோவில், தன்னை முதல் போட்டியில் ஆட வேண்டாம் என்றும் பிறகு மிடில் ஆர்டரில் இறங்கினால் அணியில் இருக்கலாம் என்று கூறியதாகவும் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். அதாவது, தனக்கு மிடில் ஆர்டரில் இறங்க விருப்பமில்லை என்றும் தமிம் அந்த வீடியோவில் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிம் இக்பாலுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன், டி-ஸ்போர்ட்ஸில் கூறும்போது, “அதிகாரம் படைத்த ஒருவர்தான் தமிம் இக்பாலை மிடில் ஆர்டரில் இறங்கச் சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு? சொன்னவர் அணியின் நன்மைக்காகவே சொல்லியுள்ளார். ஒரு போட்டிக்கு அணிச்சேர்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதில் நிறைய காரணிகள் செயல்படும். அதில் இதுவும் ஒன்று. ஏன் மிடில் ஆர்டரில் இறங்கு என்று யாரும் அவருக்குக் கூறக்கூடாதா? அணி முக்கியமா தனி வீரர் முக்கியமா?
ரோகித் சர்மா 7-ம் நிலையிலிருந்து தொடக்க வீரராக உயர்ந்து 10,000 ரன்கள் எடுக்கவில்லையா? ரோகித் சர்மாவே சில வேளைகளில் 3 அல்லது 4-ம் நிலையில் இறங்குகிறார். அதில் என்ன தவறு, என்ன கெட்டு விடும்? எனவே, இதையெல்லாம் ஒரு காரணமகாக் கூறுவது சிறுபிள்ளைத்தனம் இல்லாமல் வேறு என்னவாம்? ஒரு வீரர் அணிக்காக எந்த நிலையிலும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும். அணி தோற்று விட்டால் ஒருவர் 100 எடுத்தாலும் 200 எடுத்தாலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.
தமிம் நீங்கள் அணியைப் பற்றி சிந்திக்கிறீர்களா? இல்லையே! ரசிகர்களுக்கு இவையெல்லாம் புரியவே புரியாது. அணிக்காகத்தானே இவரை மிடில் ஆர்டரில் இறங்க சொல்கிறார். அதில் என்ன தவறு? இதற்கு ஒத்துக் கொண்டால்தான் நீ அணிக்கான வீரர். இப்படி யோசிக்கவில்லை எனில் நீங்கள் தனிப்பட்ட வீரர்தான். அணி வீரர் அல்ல. தனிப்பட்ட சாதனை, புகழ் பெயருக்காக ஆடுபவர்தான் நீங்கள். அணிக்காக ஆடுபவர் அல்ல.
தோனி ஒருமுறை கூறினார். அவர் பெறாத வெற்றிகளா, அவருக்கு இல்லாத அறிவா, என்ன சொன்னார் தெரியுமா... ‘உடற்தகுதி இல்லாமல் ஆடும் வீரர் அணியையும் நாட்டையும் ஏமாற்றுபவர்’ என்றார். இதை தமிம் மட்டுமல்ல நாம் அனைவருமே ஏற்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT