Published : 29 Sep 2023 08:55 AM
Last Updated : 29 Sep 2023 08:55 AM
2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் இணைந்து நடத்தின. 14 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தோனி தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தது.
இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்தின் வெற்றிக்கு 6 ரன் தேவையாக இருந்த நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருந்தது. இருப்பினும் பாட் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் விளாசி வெற்றி கோட்டை கடந்தார் கேன் வில்லியம்சன்.
கால் இறுதி சுற்றில் இந்திய அணி வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா, இலங்கையையும் நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகளையும், ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தி அரை இறுதி சுற்றில் நுழைந்தன. அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 329 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 233 ரன்களில் ஆட்டம் இழந்தது தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு அரை இறுதியில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவை வென்றது. இந்த ஆட்டத்தில் டேல் ஸ்டெயின் வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை யாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் 5வது பந்தை கிராண்ட் எலியாட் சிக்ஸருக்கு விளாச தென் ஆப்பிரிக்க அணியின் இறுதிப் போட்டி கனவு மீண்டும் ஒரு முறை கலைந்தது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 45 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் தனது யார்க்கரால் நியூஸிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலத்தை போல்டாக்கியதுமே ஆட்டத்தின் முடிவு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானது. கிராண்ட் எலியாட் சேர்த்த 83 ரன்களும், ராஸ் டெய்லர் சேர்த்த 40 ரன்களும்தான் நியூஸிலாந்து அணி சற்று கவுரமான ஸ்கோரை பெற உதவியது.
எளிதான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, கேப்டன் மைக்கேல் கிளார்க்சின் 74 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித்தின் 56 ரன்கள் உதவியுடன் 33.1 ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் பட்டம் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மகுடம் சூடியது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 22 விக்கெட்கள் வேட்டையாடி அதிக விக்கெட் கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர். பேட்டிங்கில் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் 547 ரன்கள் வேட்டையாடி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT