Published : 28 Sep 2023 10:01 AM
Last Updated : 28 Sep 2023 10:01 AM
ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் குழுவாக இணைந்து இந்தப் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழன் அன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் குழுவினர் இணைந்து 1734 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றுள்ளனர். 1733 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடமும், 1730 புள்ளிகளுடன் வியட்நாம் மூன்றாவது இடமும் இந்தப் பிரிவில் பெற்றிருந்தன.
துப்பாக்கி சுடுதலில் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள நான்காவது தங்கம் இது. முன்னதாக, ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு, மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் குழு, மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் என துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்களம் என மொத்தம் 24 பதக்கங்களை (செப். 28 - காலை 08:30 நிலவரப்படி) வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.
80 தங்கம், 44 வெள்ளி, 21 வெண்களம் வென்று 145 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 19 தங்கம், 18 வெள்ளி, 33 வெண்களம் வென்று 70 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 15 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்களம் வென்று 66 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது. 6 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்களம் வென்று 28 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் நான்கம் இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT