Published : 28 Sep 2023 05:27 AM
Last Updated : 28 Sep 2023 05:27 AM

ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி: தொடரை 2-1 என வென்றது இந்திய அணி

ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில், 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் விளாசிய நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ்ஸ்மித் 61 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் 74 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 58 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களும், டேவிட் வார்னர் 34 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

353 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 57 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். விராட் கோலி 56, ஸ்ரேயஸ் ஐயர் 48, கே.எல்.ராகுல் 26, வாஷிங்டன் சுந்தர் 18, சூர்யகுமார் யாதவ் 8, குல்தீப் யாதவ்2, ஜஸ்பிரீத் பும்ரா 5, ரவீந்திரஜடேஜா 35, மொகமது சிராஜ் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 4, ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x