Published : 27 Sep 2023 09:46 PM
Last Updated : 27 Sep 2023 09:46 PM
ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. மேக்ஸ்வெல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த சூழலில் 3-வது போட்டி இன்று (செப். 27) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். 30 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல் சூழலில் சிக்கினார். இருந்தாலும் மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து கொண்டிருந்தார் ரோகித். கோலி அவருக்கு உறுதுணையாக ஆடினார்.
57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்த ரோகித், மேக்ஸ்வெல் வீசிய பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து 56 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியும் மேக்ஸ்வெல் வசம் விக்கெட்டை பறிகொடுத்தார். கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், ஸ்ரேய்ஸ் ஐயர் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். ஜடேஜா, 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியாக சிராஜ் ஆட்டமிழந்தார். 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது இந்தியா. அதன் மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
மேக்ஸ்வெல், 10 ஓவர்கள் வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்களை அவர் வீழ்த்தி இருந்தார். அது ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT