Published : 27 Sep 2023 10:47 AM
Last Updated : 27 Sep 2023 10:47 AM

யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசத சாதனையை தகர்த்த நேபாளத்தின் தீபேந்திர சிங்!

தீபேந்திர சிங்

ஹாங்சோ: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது நேபாளம். இந்தப் போட்டியில் அதிவேக அரைசதம் மற்றும் சதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கிரிக்கெட்டில் நேபாளம் மற்றும் மங்கோலியா விளையாடின. முதலில் பேட் செய்த நேபாளம், 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. மங்கோலியா 41 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

நேபாள அணி வீரர்கள் குஷல் மல்லா, 50 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார். தீபேந்திர சிங், 10 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் பதிவு செய்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 8 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 9 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் 2007-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் பதிவு செய்த யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2019-ல் அயர்லாந்து அணிக்கு எதிராக குவித்த 278 ரன்கள் தான் ஒரு அணி ஒரே இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதையும் இந்தப் போட்டியில் நேபாளம் தகர்த்துள்ளது. 26 சிக்ஸர்களுடன் 314 ரன்களை நேபாளம் எடுத்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக ஆசிய கோப்பை போட்டியில் குஷல் மல்லா

குஷல் மல்லா, 34 பந்துகளில் சதம் பதிவு செய்தார். அதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் பதிவு செய்த வீரராகி உள்ளார். 12 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை அவர் விளாசினார். இதற்கு முன்னர் ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் பதிவு செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x