Published : 27 Sep 2023 10:18 AM
Last Updated : 27 Sep 2023 10:18 AM
பிரிஸ்டலில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங்கிலாந்து 31 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்களை விளாசி பல பேட்டிங் ரெக்கார்டுகளைக் காலி செய்தது. 31 ஓவர்களுக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்களை விளாச மற்றொரு தொடக்க வீரர் ஃபில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 39 ரன்களை அடித்து நொறுக்கினார். ஜாக் கிராலி தன் பங்கிற்கு 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாசினார். இவர்கள் அனைவருக்கும் மேலாக இங்கிலாந்து டெஸ்ட் ஓப்பனர் பென் டக்கெட் 78 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்களை நொறுக்கினார். இதில் சில பல ரெக்கார்டுகளை காலி செய்தது இங்கிலாந்து.
சமீப காலத்திய ஆக்ரோஷ அணுகுமுறையைக் கைவிடாமல் ஆடிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே பில் சால்ட் மூலம் அதிரடி தொடக்கம் கண்டது. அயர்லாந்து பவுலர் மார்க் அடைரின் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என்று 19 ரன்களை விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் ஓவர் அதிக ரன்கள் சாதனையான 19 ரன்கள் தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன் செய்தது. 2003-ல் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 19 ரன்களை முதல் ஓவரிலேயே விளாசி உலக சாதனை புரிந்தார், அவர் அடித்தது யாரைத் தெரியுமா? இன்று உலக சாதனை மன்னனாகத் திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் முதல் ஓவரில்தான் பிளந்து கட்டினார் கிரேம் ஸ்மித்.
இந்தத் தொடக்கம் நீடித்து, அதிரடியும் தொடர்ந்தது, முதல் 4 ஓவர்களில் சால்ட்-ஜாக்ஸ் கூட்டணி 60 ரன்களை விளாசினர். 5வது ஓவர் முடிவில் 66, 6வது ஓவர் முடிவில் 84. முதலில் பேட் செய்து எந்த ஒரு அணியும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5-6 ஓவர்களில் இவ்வளவு ரன்களை அடித்ததில்லை. பில் சால்ட் 6-வது ஓவரிலேயே 22 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது இங்கிலாந்தின் 5-வது அதிரடி அரைசதமாகும்.
இதற்கு முன் லியாம் லிவிங்ஸ்டன் 17 பந்துகளிலும், இயான் மோர்கன் 21 பந்துகளிலும் ஜானி பேர்ஸ்டோ 21 பந்துகளிலும் ஜாஸ் பட்லர் 22 பந்துகளிலும் அரைசதம் எட்டியுள்ளனர். 7வது ஓவரில் சால்ட் அவுட் ஆகும் போது இங்கிலாந்தின் ஸ்கோர் 87. இதில் சால்ட் 28 பந்துகளில்ல் 61 ரன்கள் பங்களிப்பு செய்தது இன்னொரு சாதனை. சால்ட்டிற்கும், ஜாக்ஸிற்குமான ஒட்டு மொத்த பார்ட்னர்ஷிப் ரன் ரேட் 12.42. அதிவேக ஒருநாள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இது 6ம் இடத்தில் உள்ளது. ஆனால் இந்தச் சாதனையின் தனித்துவம் என்னவெனில் முந்தைய 5 சாதனைகளும் இலக்கை விரட்டும் போது வந்ததே, இது முதலில் பேட் செய்த போது வந்தது.
பில் சால்ட்டின் 28 பந்து 61 ரன்கள் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 50+ ஸ்கோர் ஆகும். சனத் ஜெயசூர்யா 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 65 பந்துகளில் 134 எடுத்த போது ஸ்ட்ரைக் ரேட் 206.15, இப்போது பில் சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 217.85. 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 145/2. 15 ஓவர்கள் முடிவில் இந்த ஸ்கோரும் புதிய இங்கிலாந்து சாதனையாகும். 27வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 250 ரன்களை எட்டியது. பென் டக்கெட் 78 பந்துகளில் விளாசிய 107 ரன்கள் அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment