Published : 27 Sep 2023 08:47 AM
Last Updated : 27 Sep 2023 08:47 AM
2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. எப்போதும் இல்லாத வகையில் 14 அணிகள் கலந்துகொண்டன. நெதர்லாந்து, கனடா அணிகள் மீண்டும் களமிறங்கின. நமீபியா அறிமுக அணியாக இடம் பெற்றது. 14 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 3 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 6-ல் மோதின. இங்கிருந்து 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. அதில் இருந்து இரு அணிகள் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்தின.
இந்த தொடரில் முன்னணி அணிகளான தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதியை தவறாகப் புரிந்து கொண்டதால் தென்னாப்பிரிக்கா ஒரு ரன்னை கூடுதலாக எடுக்க முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில்இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே சென்று விளையாட மறுத்தது. இதனால் அந்த அணி லீக் சுற்றுடன் நடையை கட்டியது.
சவுரவ் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணிலீக் சுற்றில் 5 வெற்றிகளை குவித்தது. மறுபுறம் ரிக்கி பாண்டிங்தலைமையிலான ஆஸ்திரேலியா 6 வெற்றிகளையும் குவித்தது.இந்த இரு அணிகளுடன் கென்யா, ஜிம்பாப்வே, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தன. இந்த சுற்றில் இந்திய அணியானது கென்யா,இலங்கை, நியூஸிலாந்து அணிகளை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது. மறுபுறம் ஆஸ்திரேலியாவும் 3 வெற்றிகளை குவித்து அரை இறுதியில் கால்பதித்தது.
நியூஸிலாந்து அணி, கென்யா சென்று விளையாட மறுத்தது. இதனால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேவேளையில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளை வீழ்த்திய கென்யா முதன் முறையாகஅரை இறுதியில் நுழைந்தது. அரை இறுதி சுற்றில்ஆஸ்திரேலியா, இலங்கை அணியையும், இந்தியா, கென்யாவையும் வீழ்த்தின.
கென்யாவுக்கு எதிரான அரை இறுதியில்இந்தியா 4 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது. சவுரவ் கங்குலி 111 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 83 ரன்களும் விளாசினர். இலக்கை துரத்திய கென்யா ஜாகீர்கான்,ஆசிஷ் நெஹ்ரா, ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோரது வேகத்தில் 46.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் டிக்கோலோ 56 ரன்கள் சேர்த்தார்.
இலங்கைக்கு எதிரான அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியால் 212 ரன்களே எடுக்க முடிந்தது. மந்தமான ஆடுகளத்திலும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 91 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். எளிதான இலக்கை துரத்திய போதிலும் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை பிரட் லீ சிதைத்தார். மெக்ராத் ஒரே ஒருவிக்கெட் கைப்பற்றிய போதிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இலங்கை அணி 38.1 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்து தோல்வியின் விளிம்பில் இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்த கங்குலிடாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்தஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங் 140, டேமியன் மார்ட்டின் 88, ஆடம் கில்கிறிஸ்ட் 57, மேத்யூ ஹைடன் 37 ஆகியோரது விளாசல் காரணமாக 2 விக்கெட்கள் இழப்புக்கு 359 ரன்களை வேட்டையாடியது. இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்கத்திலேயே சச்சின் டெண்டுல்கரை இழந்ததும் நம்பிக்கையை இழந்தது. எனினும் வீரேந்திர சேவக் தனது அதிரடியை காட்டினார்.
17 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு இந்திய அணி103 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. அப்போது மழைகுறுக்கிட்டதால் இந்திய அணியின் பேட்டிங் ரிதம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் சேவக் 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ராகுல் திராவிட் 47 ரன்களில் ஆண்டிபிச்சல் பந்தில் போல்டனார். இதன் பின்னர் சரிவை சந்தித்தஇந்திய அணி 39.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையை வென்றது. 11 ஆட்டங்களில் 673 ரன்கள் வேட்டையாடிய சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகனாக தேர்வானார்.
மிரட்டிய அக்தர்: 2003 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் ஷோயிப் அக்தர், இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 161.3 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்திருந்தார்.
சிக்கிய ஷேன் வார்ன்: 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர், உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT