Published : 27 Sep 2023 08:21 AM
Last Updated : 27 Sep 2023 08:21 AM

இன்று 3-வது ஒருநாள் போட்டி: சாதனை படைக்குமா இந்திய அணி?

ரோகித் மற்றும் விராட் கோலி

ராஜ்கோட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முதன்முறையாக முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைக்கும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்தூரில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று ராஜ்கோட்டில் மோதுகின்றன.

முதல் இரு போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதேவேளையில் இந்தூர் போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மொகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொந்த காரணங்களுக்காக கடைசி ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளனர். அதேவேளையில் அக்சர் படேல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியானது 13 பேர் கொண்ட குழுவில் இருந்தே தேர்வு செய்யப்படக்கூடும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி இதுவரை முழுமையாக வென்றது இல்லை. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை 3-0 என முழுமையாக வென்று சாதனை படைக்கும்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், பந்து வீச்சு இந்த தொடரில் மேம்பட்ட வகையில் இல்லை. இதற்கு அந்த அணியின் முன்னணி வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டு வருவதும் காரணமாக கூறப்படுகிறது. பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் களமிறங்கக்கூடும். பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x