Published : 25 Sep 2023 12:52 PM
Last Updated : 25 Sep 2023 12:52 PM
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பந்தாடியது, இதில் காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி சதங்கள் எடுத்தனர். ஆனால் இருவருமே தங்கள் சொந்த சதத்தை எட்ட தங்களது 85 ரன்களிலிருந்தே ஆட்டத்தை மந்தப்படுத்தினர். இது தெளிவாகவே தெரிந்தது. நமக்குத் தெரிந்தது ரசிகர்களுக்கும் தெரிகிறது, பண்டிதர்களும் உணர்ந்தனர், இதனையடுத்து அய்யர், கில் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஸ்ரேயஸ் அய்யர் 90 பந்துகளில் 105, ஷுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்கள் விளாச, பிற்பாடு சூரியகுமார்யாதவ் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாச கேப்டன் கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா 399 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. சூரியகுமார் யாதவ் கேமரூன் கிரீனின் ஒரே ஓவரில் முதல் 4 பந்துகளில் 4 சிக்சர்களை விளாச மீண்டுமொரு 6 சிக்சர்கள் அடிக்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு ஆனால் கிரீன் தப்பினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆகச்சிறந்த ரன்களை எடுக்கக் காரணமான இந்திய அணியின் பேட்டர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் அய்யர் மீது நெட்டிசன்களும் சில கிரிக்கெட் பண்டிதர்களும் சொந்த மைல்கல்லிற்காக ஆடுவதா அணிக்காக ஆடுவதா, சதம் எடுக்கும் போது ஏன் ரன் ரேட் குறையுமாறு மந்தமாக ஆடினார்கள் என்று கேள்வி எழுப்பி சாடியுள்ளனர்.
வர்ணனையில் இருந்த ஹர்ஷா போக்ளே, இருவரும் சதங்களை நெருங்கும் போது ஸ்லோ ஆகிவிட்டனர் ஏனெனில் இருவரும் களைப்படைந்து விட்டனர் என்றார், ஆனால் அருகில் இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர் உடனே ‘இல்லை இல்லை, இருவரும் தங்கள் சதம் என்னும் மைல்கல்லை நெருங்குகின்றனர்’ என்று மறுதலித்தார். ஷுப்மன் கில் முதலில் 65 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார், ஸ்ரேயஸ் அய்யர் 69 பந்துகளில் 84 ரன்கள் என்று நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். ஸ்ரேயஸ் அய்யர் அடுத்த 26 பந்துகளில் 21 ரன்கள்தான் எடுத்தார், கில் இன்னும் மோசமாக அடுத்த 27 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த வகையான மந்தமான பேட்டிங்கை முதலில் ஒழிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் சாடியுள்ளனர்.
ஒருமுறை நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டூல் வர்ணனை செய்து கொண்டிருந்த போது இந்தியர்கள் ‘புள்ளி விவரங்களுக்காக ஆடுகின்றனர்’ என்று சாடியிருந்ததை ஒரு நெட்டிசன் தன் பங்கிற்கு பகிர்ந்து இத்தகையப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணி முதல் 20 ஓவர்களில் 7.90 என்ற ரன் ரேட்டில் 158 ரன்களக் குவித்திருந்தனர். அடுத்து 10.5 ஓவர்களில் 58 ரன்கள்தான் வந்தது. ராகுல், சூரியகுமார் அதிரடியாக ஆடாமல் இருந்திருந்தாலோ, இஷான் கிஷன் ஒரு குட்டி அதிரடி இன்னிங்ஸை 18 பந்துகளில் 38 ரன்களை எடுக்காமல் இருந்திருந்தாலோ நிச்சயம் ஸ்கோர் 399 ரன்களை எட்டியிருக்காது. ஸ்கோர் 350-360 பக்கம்தான் இருந்திருக்கும். பிற்பாடு மழையினால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்குக் குறைக்கப்பட்ட போது 360 ரன்கள் என்று இந்திய டோட்டல் இருந்திருந்தால் அவர்கள் இலக்கும் இன்னும் குறைந்திருக்கும் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வெற்றியைக் கூட ஈட்டியிருக்கலாம்.
ஆகவே மைல்ஸ்டோன்களைக் கணக்கில் கொண்டு ஆட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்துவது தவறு என்று கிரிக்கெட் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT