Published : 25 Sep 2023 05:23 AM
Last Updated : 25 Sep 2023 05:23 AM
முந்தைய 5 உலகக் கோப்பை தொடர்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்தமுறை மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. 2 பிரிவுகளில் தலா 6 அணிகள் பிரிக்கப்பட்டன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா, இலங்கை, பாகிஸ் தான் ஆகிய 3 நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின.
இந்தியாவில் 17 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 16 ஆட்டங்களும், இலங்கையில் 4 ஆட்டங்களும் நடத்தப்பட்டன. இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள சென்ட்ரல் வங்கி மீது வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் நடந்த லீக் ஆட்டங்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் மறுத்துவிட்டன. இதனால் இலங்கை அணி, ஒரு ஆட்டத்திலும் பங்கேற்பதற்கு முன்னதாகவே கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.
டெஸ்ட் போட்டி விளையாடும் 9 நாடுகளுடன் கென்யா, நெதர்லாந்து, யுஏஇ அணிகள் 1994-ல் நடந்த ஐசிசி டிராபி போட்டி மூலம் தகுதி பெற்றன. இந்தத் தொடரில்தான் முதல்முறையாக தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. இலங்கையின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா, தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். மேலும் அவருக்கு ஆடி காரும் பரிசாக வழங்கப்பட்டது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் யாருமே ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்காத நிலையில் இலங்கை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஏற்கெனவே பல உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருந்தாலும், லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது கேப்டன் அர்ஜுன ரணதுங்க, தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யா, ஆல்-ரவுண்டர் அரவிந்த டி சில்வா ஆகியோரின் அற்புதமான ஆட்டமும், பயிற்சியாளர் டேவ் வாட்மோரின் திறமையான வழிநடத்தலும்தான் என்பதில் சந்தேகமில்லை.
லீக் ஆட்டங்களின் முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறின.
கால் இறுதியில் இங்கிலாந்தை, இலங்கை அணியும், தென் ஆப்பிரிக்காவை மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா அணியும் வீழ்த்தின. 2-வது கால் இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா, 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. நவ்ஜோத் சித்து அபாரமாக விளையாடி 93 ரன்கள் எடுத்தார். அரை இறுதியில் இந்தியாவை, இலங்கை அணியும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இறுதிச் சுற்று பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வாகை சூடியது. அரவிந்த டி சில்வா 107 ரன்களும், அர்ஜுன ரணதுங்கா 47 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பவுலிங்கின்போது 3 விக்கெட்களையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை அரவிந்த டி சில்வா வென்றார்.
இந்தத் தொடரில் அரவிந்த டி சில்வா, 484 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 2-ம் இடம் பிடித்தார். சச்சின் டெண்டுல்கர் 523 ரன்களுடன் முதலிடம் பிடித்தார். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி அரை இறுதியில் தோல்வி கண்டதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கண்ணீர் வடித்தனர்.
சாதனை மேல் சாதனை...: இந்த உலகக் கோப்பை போட்டியில் இலங்கை பல்வேறு சாதனைகளைப் படைத்தது. 1996-ம் ஆண்டுக்கு முன்பு வரை எந்தவொரு உலகக் கோப்பையையும் போட்டியை நடத்திய நாடு வென்றதில்லை. அந்த சாதனையை இலங்கை முறியடித்தது. மேலும் இறுதிப் போட்டியில் சேசிங் செய்து இலக்கை எட்டி எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை. அந்தச் சாதனையையும் இலங்கை அணி படைத்தது. அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி வாகையை இலங்கை அணி சூடியிருந்தது. எந்தவொரு ஆட்டத்திலும் அந்த அணி தோல்வி காணவில்லை.
வினோத் காம்ப்ளி கண்ணீர்: இந்திய அணி மொகமது அசாருதீன் தலைமையில் களமிறங்கியது. அரை இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் கொல்கத்தாவில் மோதின. இலங்கை முதலில் விளையாடி 251 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி சச்சின் ஆட்டமிழந்ததும், 35 ஓவர்களில் 120 ரன்களுக்குத் தடுமாறிக் கொண்டிருந்தது. கிரிக்கெட் தாகம் கொண்ட கொல்கத்தா ரசிகர்கள் மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டு பழங்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வீசினர்.
இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படவே இலங்கை வெற்றி பெற்றதாக போட்டி நடுவர் கிளைவ் லாயிட் அறிவித்தார். இதனால் இந்திய ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். மைதானத்தில் இருந்து வினோத் காம்ப்ளி கண்ணீருடன் வெளியேறினார்.
ஜொலித்த ஜெயசூர்யா...: இந்த போட்டியில் யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக விளையாடினார் சனத் ஜெயசூர்யா. பயிற்சியாளர் டேவிட் வாட்மோர், கேப்டன் அர்ஜுன ரணதுங்க ஆகியோருடன் முழு ஆதரவுடன் விளையாடிய ஜெயசூர்யா, தொடர் முழுவதும் அதிரடி காட்டினார். தொடக்க வீரர் ரொமேஷ் கலுவிதரனாவுடன் இணைந்து முதல் 15 ஓவர்களில் அதிரடியாக ரன்களைக் குவித்தது இலங்கையின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
பங்கேற்ற அணிகள்: இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, கென்யா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து, யுஏஇ.
இறுதிப் போட்டி:
அதிக ரன்கள், அதிக விக்கெட்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT