Published : 23 Sep 2023 05:43 AM
Last Updated : 23 Sep 2023 05:43 AM
1987 -ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்பட்டது. முதன்முறையாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின. இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்துதான் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணியின் சகாப்தம் தொடங்கியது. ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி கண்டது. அதுவும் நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு எதிராக 2-வது முறையாக மோதிய ஆட்டத்திலேயே தோற்றிருந்தது.
அரை இறுதி சுற்றுக்கு தொடரை நடத்திய இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன. 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணி 255 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 45.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மறுபுறம் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் கால்பதித்தது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்களே எடுத்தது. இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியை 8 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் என மட்டுப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக உலகக் கோப்பையை கைகளில் ஏந்தியது. நெருக்கமாக அமைந்த இறுதிப் போட்டியில் ஸ்டீவ் வாஹ், ஆலன் பார்டர் ஆகியோரது சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர். இருவரும் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக 12 மாதங்களாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு மோசமாகவே இருந்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையிலேயே உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய மண்ணில் காலடி வைத்திருந்தது. எனினும் கடினமான பயிற்சி முறைகளால் அந்த அணி வெற்றிகளை குவித்து சாதித்து காட்டியது. இந்தியாவில் கடுமையான வெப்பம் இருந்த போதிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் 4 முதல் 5 மணி நேரம் பயிற்சி ஈடுபட்டிருந்தனர். இதை மற்ற அணியினர் ஏளனமாக பார்த்ததும் உண்டாம். தங்கியிருந்த ஓட்டல் அறைகளில் புல்வெளி தென்பட்டால் அதைக்கூட ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் அங்கு வீரர்களை அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்துள்ளார். கடின முயற்சிக்கு கிடைத்த பலனாகவே சாம்பியன் பட்டம் கைகூடியது. அங்கிருந்துதான் உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடங்கியது. இதுவரை 5 முறை உலகக் கோப்பை தொடரை அந்த அணி வென்றுள்ளதே இதற்கு சாட்சி.
‘தாராள மனதுக்கு கிடைத்த பரிசு’: லீக் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்ரேலியா 6 விக்கெட்கள் இழப்புக்கு270 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது டீன் ஜோன்ஸ், மணீந்தர் சிங் வீசிய பந்தை மிட் ஆஃப்திசையை நோக்கி விளாசினார். இது பவுண்டரியா அல்லது சிக்ஸரா என்பதைகள நடுவரால் உறுதியாக கூற முடியவில்லை. அவர், அங்கு பீல்டிங் நின்றரவி சாஸ்திரியிடம் கேட்க அவரோ பவுண்டரி என சைகை காட்டினார். இதனால் நடுவர் பவுண்டரி கொடுத்தார்.
ஆனால் போட்டியின் நடுவே இதுதொடர்பாக டீன் ஜோன்ஸ் நடுவரிடம் முறையீடு செய்தார். பந்து சிக்ஸருக்குதான் சென்றது என வாதிட்டார். பின்னர் நடுவர், இந்திய அணியின் கேப்டன் கபில்தேவை அழைத்து பேசினார். இதையடுத்து பவுண்டரி என அறிவிக்கப்பட்ட பந்தை சிக்ஸராக மாற்றும் முடிவுக்கு கபில்தேவ் சம்மதம் தெரிவித்தார். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை 268-ல் இருந்து 270 என முடித்திருந்தது. கபில்தேவின் இந்த தாராளமான மனது, இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 49.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
1987-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. முதன் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து போட்டியை நடத்தியது. முதல் 3 உலகக் கோப்பையும் 60 ஓவர்களாக நடத்தப்பட்ட நிலையில் 1987-ல் 50 ஓவர்களை கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.
கபில் தேவ் சாதனை காலி: லீக் சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 125 பந்துகளில், 16 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 181 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக 175 ரன்கள் குவித்திருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார்.
ஹாட்ரிக் நாயகன்: லீக் சுற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் சேத்தன் சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர், படைத்தார். அதிலும் அவர், வீழ்த்திய 3 வீரர்களும் ஸ்டெம்புகள் சிதற வெளியேறி இருந்தனர்.
பங்கேற்ற அணிகள்
இறுதிப் போட்டி
அதிக ரன்கள், அதிக விக்கெட்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT