Published : 21 Sep 2023 04:54 PM
Last Updated : 21 Sep 2023 04:54 PM

4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை - இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் முன்னிலை வீரர் ஜோ ரூட். அனைத்து வடிவ வீரர் என்றாலும், டி20 சர்வதேச போட்டிகளில் அவர் இப்போதெல்லாம் ஆடுவதில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோ ரூட் பெரிய தாதா என்று ஏற்கெனவே ஸ்தாபித்து விட்டார். ஒருநாள் போட்டிகளில் 162 போட்டிகளில் 6246 ரன்களை 48.79 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 16 சதங்கள் 36 அரைசதங்கள். ஸ்ட்ரைக் ரேட் 86.70. அதிகபட்ச ஸ்கோர் 133 நாட் அவுட். இந்நிலையில் ஜோ ரூட் போன்ற ஒரு வீரர் ஒரு வடிவத்தில் தாதாவாக இருந்து கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் பார்ம் அவுட் ஆகியுள்ளதை நம்ப முடிகிறதா?

ஆம்! ஜோ ரூட் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் எடுத்து 4 ஆண்டுகள் ஆகின்றன. 2019-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் 100 ரன்கள் எடுத்ததே ஜோ ரூட் எடுத்த கடைசி சதம். அதன் பிறகு 88, 79, கடைசியாக 86 ரன்களை எடுத்ததே சதத்துக்கு நெருக்கமாக அவர் எடுத்த ஸ்கோர்களாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1, 39,0, இந்தியாவுக்கு எதிராக 0, 11, 0. சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 6,0,4, 29.

அதுவும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் செம தடவு தடவினார். குறைந்த ஸ்கோரிலேயே இருமுறை கேட்ச் கொடுத்து தவற விடப்பட்டது. மேலும் ஸ்லாக் ஸ்வீப்பில் அவுட் ஆனதும் அவரது பார்ம் இன்மையை அறிவுறுத்துகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் 2வது டவுன் முதல் 4வது டவுன் வரை ஆக்கிரமிக்கிறார்கள். மிகவும் முக்கியமான டவுன்கள் இவை. இவர்கள் மூவருமே இங்கிலாந்து ஒருநாள் அணியில் சீரான முறையில் இடம்பெறவில்லை. இதற்கு காயம் உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஜோ ரூட் கடந்த 4 ஆண்டுகளில் 15 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். டெஸ்ட் கேப்டனாக இருந்ததால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் கவனம் செலுத்தாமல் இருந்தார். இங்கிலாந்து அணியின் ஒருங்கிணைந்த அங்கத்தினர்களில் ஜோ ரூட் ஒருவர் என்பதால் அவரது ரன் வறட்சி அங்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படும். மேலும் திடீரென ஜோ ரூட் போன்ற ஒரு வீரருக்கு மாற்று வீரரை அவ்வளவு எளிதில் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் களமிறக்கி விட முடியாது. பேர்ஸ்டோ ஆரம்பக்கட்டத்தில் தாக்குதல் ஆட்டம் ஆட, லியாம் லிவிங்ஸ்டன் கேப்டன் பட்லர் இருவரும் முடிவு ஓவர்களை கவனித்துக் கொள்ள இவர்களை ஒருங்கிணைக்கும் இடத்தில் ஆடுவது ஜோ ரூட்தான்.

ஜோ ரூட் இந்த ரோலுக்கு மிகவும் பொருத்தமானவர். ஏனெனில் இவரது ஆட்டத்தில் அதிக ரிஸ்குகள் இருக்காது. பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷம் காட்டுவார் ஜோ ரூட். இவரைப்போன்ற ஒருவர் கிரீசில் இருந்தால் எதிர்முனை வீரர்களின் பதற்றம் குறையும். அமைதியான சூழலில் இங்கிலாந்து வெற்றி பெறாமல் இருந்ததில்லை.

மேலும் டேவிட் மலான் இப்போது பிரமாதமாக ஆடுவதால் ஜேசன் ராயும் அணியில் இடத்தை இழந்து விட்டார். இதனையடுத்து ஜோ ரூட் பார்ம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முக்கியமான கட்டத்தில் சதமெடுத்தார் ரூட். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செமிபைனலில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் அதிக ரன்களை எடுத்தவரே ஜோ ரூட்தான்.

ஆனால் 2020-ல் 16 ஒருநால் போட்டிகளில் ஜோ ரூட்டின் சராசரி 27.85. நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் எப்போதாவது ஆடுவது, கடந்த ஓராண்டுக்குப் பிறகு திடீரென 4 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியது ஜோ ரூட்டின் பேட்டிங் திறமைக்கான விஷயமாகத் தென்படவில்லை. ஜோ ரூட் பார்முக்கு வரவில்லை எனில், இங்கிலாந்தின் 3-ம் நிலையில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை எதிரணியினர் பயன்படுத்திக் கொண்டு அந்த அணியைக் கவிழ்க்கவே முயல்வார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x