Published : 21 Sep 2023 08:46 AM
Last Updated : 21 Sep 2023 08:46 AM
மொகமது சிராஜ் முதலிடம்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் 8 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சிராஜ் முதலிடத்தை பிடித்திருந்தார். ஆனால் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் சிராஜை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றி இருந்தார். தற்போது 694 புள்ளிகளுடன் மொகமது சிராஜ் முதலிடத்தில் உள்ளார். ஜோஷ் ஹேசில்வுட் ஓர் இடம் பின்தங்கி 678 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 2-வது இடம் வகித்த நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், 677 புள்ளிகளை பெற்றுள்ளார்.
கொடியை ஏந்திச் செல்வது யார்? 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவில் நாட்டின் தேசிய கொடியை ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் ஆகியோர் இணைந்து ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
3 இடங்களில் உலகக் கோப்பை: 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்களை உறுதி செய்துள்ளது ஐசிசி. 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில் இந்த தொடர் நடைபெறும் இடங்களை ஐசிசி உறுதி செய்துள்ளது. இதன்படி புளோரிடா மாகாணத்தில் உள்ள புரோவார்ட் கவுண்டி மைதானம், டல்லாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரேய்ரி, நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஐசனோவர் பார்க் ஆகிய மைதானங்களில் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபாலில் இந்தியா அபாரம்: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான வாலிபாலில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில் பலம் வாய்ந்த தென் கொரியா அணியை வீழ்த்தியது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள தென் கொரியாவுக்கு எதிராக 73-வது இடம் வகிக்கும் இந்திய அணி அபார திறனை வெளிப்படுத்தியது. கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த கொரியா அணியை 25-27, 29-27, 25-22, 20-25, 17-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது இந்திய அணி. கடந்த 10 ஆண்டுகளில் தென் கொரியா அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் கம்போடியாவை வீழ்த்தியிருந்த இந்திய அணி இரு வெற்றிகளின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அரை இறுதியில் அன்டிம் பங்கல்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் செர்பியாவில் உள்ள பெல்கிரேடு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்டிம் பங்கல், உலக சாம்பியனான அமெரிக்காவின் ஒலிவியா டொமினிக் பாரிஷை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் போலந்தின் ரோக்சனா மார்த்தா ஜசினாவை 10-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். கால் இறுதி சுற்றில் 9-6 என்ற கணக்கில் நடாலியா மாலிஷேவாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால் பதித்தார் அன்டிம் பங்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT