Last Updated : 21 Sep, 2023 08:35 AM

 

Published : 21 Sep 2023 08:35 AM
Last Updated : 21 Sep 2023 08:35 AM

உலகக் கோப்பை நினைவுகள் | 1979-ல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த மேற்கு இந்தியத் தீவுகள்

கோப்புப்படம்

முதல் உலகக் கோப்பையின் வெற்றியை தொடர்ந்து 1979-ம் ஆண்டு 2-வது உலகக் கோப்பை தொடரையும் இங்கிலாந்திலேயே நடத்தியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணியே கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த கணிப்பை அவர்கள், பொய்க்க செய்யவில்லை. கிளைவ் லாயிட் தலைமையில் சாம்பியன் பட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தக்க வைத்துக்கொண்டது.

இந்த சாதனையை 28 வருடங்களுக்குப் பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக இரு முறை கோப்பையை வென்று முறியடித்தது. எதிர்த்து நின்ற அனைத்து அணிகளையும் மிரளச் செய்ததுடன், எந்த அணியாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு ஆக்ரோஷமாக செயல்பட்டு மீண்டும் ஒரு முறை கிரிக்கெட் உலகை அதிர வைத்தது.

கனடா அறிமுகம்: 1979-ம் ஆண்டு உலக் கோப்பையிலும் 8 அணிகள் களமிறங்கின. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 6 பிரதான அணிகளுடன் ஐசிசி-யின் உறுப்பு நாடான இலங்கையும் இடம் பெற்றது. முதல்உலகக் கோப்பையில் விளையாடிய கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு பதிலாக கனடா அறிமுக அணியாக களமிறங்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா தகுதி சுற்றிலேயே சோபிக்காமல் போனது.

இலங்கை முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் வீழ்ந்தது. நடப்பு சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடைசிலீக் ஆட்டத்தில் இந்திய அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனினும் இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேற இது போதுமானதாக இருக்கவில்லை.

கனடா தனது லீக் சுற்றில் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி அடைந்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக அந்த அணி 45 ரன்களில் சுருண்டிருந்தது.

விவியன் ரிச்சர்ட்ஸ்: 1979-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடரின் சிறந்த ஆட்டமாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகியோருடன் காலிஸ் கிங்ஸும் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தினார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மைக் பிரேர்லி பீல்டிங் செய்ய எடுத்த முடிவு இறுதியில் தவறு என்பதை உணர்த்தியது.

முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் விவியன் ரிச்சர்ட்ஸ் 157 பந்துகளில் விளாசிய 138 ரன்கள், காலிஸ் கிங்ஸ் 66 பந்துகளில் விளாசிய 86 ரன்கள் உதவியுடன் 60 ஓவர்களில் 9விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. விவியன் ரிச்சர்ட்ஸின் மட்டையில் இருந்து 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் பறந்திருந்தன. இதில் ஒரு அதிசய ஷாட் அடங்கியிருந்தது.

விவியன் ரிச்சர்ட்ஸ்132 ரன்களை சேர்த்திருந்த போது, ஃபுல் லென்ந்த்தில் பந்து வரும் என எதிர்பார்த்தபடி ஆஃப்சைடுக்கு நகர்ந்து சென்று ஸ்டைலிஷாக விக்கெட் கீப்பருக்கு பின்புறமாக சிக்ஸர் விளாசி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த ஷாட் தனது கண்டுபிடிப்பு என பின்னாளில் நினைவு கூர்ந்திருந்தார் ரிச்சர்ட்ஸ். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

287 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு மைக் பிரேர்லி (64), ஜெஃப் பாய்காட் (57) திடமான தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் 38 ஓவர்களில் 129 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி பிரிந்ததும் தேவைப்படும் ரன் விகிதம் அதிகரித்ததால் நெருக்கடியை சந்தித்த இங்கிலாந்து அணி மொத்தமாக சரிந்தது. காலின் கிராஃப்ட்3 விக்கெட்களையும், ஜோயல்கார்னர் 11 பந்துகள் இடைவெளியில் வீழ்த்திய 5 விக்கெட்களாலும் இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

முதல் உலகக் கோப்பையை போன்று 60 ஓவர்களாகவே போட்டி நடத்தப்பட்டது. சிவப்பு பந்தே இந்தத் தொடரிலும் பயன்படுத்தப்பட்டது.

தள்ளாடிய இந்தியா: 1979-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெங்கடராகவன் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 190 ரன்களில் ஆட்டமிழந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 182 ரன்களையே இந்திய அணி எடுத்தது. நியூஸிலாந்து அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி கண்டது. இலங்கைக்கு எதிராக 239 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 54.1 ஓவரில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சாம்பியனுக்கு ரூ.1.80 லட்சம் பரிசு: 1979-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இது முதல் உலகக் கோப்பையில் அந்த அணி பெற்ற பரிசுத் தொகையைவிட இரண்டரை மடங்கு அதிகம் ஆகும். 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்பட்டது.

தொடரில் பங்கேற்ற அணிகள்

இறுதிப் போட்டி

அதிக ரன்கள், விக்கெட்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x