Published : 21 Sep 2023 08:10 AM
Last Updated : 21 Sep 2023 08:10 AM
புதுடெல்லி: இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக நிதி இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருபவர் சுமித் நாகல். ஏடிபி தரவரிசையில் 159வது இடம்வகிக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அவர், சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஏடிபி சுற்றுப்பயணத்தை தொடர ரூ.1 கோடிக்கான பட்ஜெட்டை சுமில் நாகல் தயார் செய்துள்ளார்.
இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஜெர்மனியில் உள்ள நான்செல் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த அவர், நிதிப் பற்றாக்குறையால் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அவருக்குப் பிடித்த இடத்தில் பயிற்சி பெற முடியாமல் இருந்துள்ளது.
அவரது நண்பர்களான சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் கிறிஸ்டோபர் மார்கிஸ் ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர் ஜெர்மனியில் தங்குவதற்கு தேவையான நிதி உதவி செய்துள்ளனர். நிதி நெருக்கடி என்பது அநேகமாக ஒவ்வொரு இந்திய டென்னிஸ் வீரரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது.
ஆனால் நாட்டின் நம்பர் 1 வீரரான சுமித் நாகல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் போதுமான பணத்தைச் சேமிக்கவில்லை என்பது இந்திய டென்னிஸ் கட்டமைப்பில் உள்ள சிக்கலையும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஏடிபி போட்டிகளுக்கு வீரர்கள் தாங்களாகவே நிதியை திரட்டிகொள்ள வேண்டும் என்ற நிலையை அம்பலப்படுத்தி உள்ளது. போட்டிகளில் பெறும் பரிசுத்தொகை, ஐஓசிஎல் வழங்கும் சம்பளம் மற்றும் மகா டென்னிஸ் அறக்கட்டளை மூலம் பெறும் நிதியுதவி என அனைத்தையும் பயிற்சிக்காகவே செலவிடுவதாக சுமித் நாகல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுமித் நாகல் கூறும்போது, “இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனது வங்கி கணக்கு இருப்பில் இருந்தது சுமார் ரூ.80 ஆயிரம் மட்டுமே. தற்போது மகா டென்னிஸ் அறக்கட்டளையை சேர்ந்த பிரசாந்த் சுதாரிடமிருந்து உதவியைப் பெறுகிறேன், மேலும் ஐஓசிஎல் நிறுவனத்திடமிருந்து மாதாந்திர சம்பளம் பெறுகிறேன். ஆனால் ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் நுழைய தேவையான நிதி சுமார் ஒரு கோடி ஆகும்.
இந்த ஆண்டில் 24 தொடர்களில் பங்கேற்றேன். இதன் வாயிலாக ரூ.65 லட்சம் கிடைத்தது. இதில் அதிகபட்சமாக அமெரிக்க ஓபன் தொடரில் ரூ.18 லட்சம் பெற்றேன். நான் சம்பாதிப்பதை எல்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக முதலீடு செய்கிறேன். நான் ஒரு பயிற்சியாளருடன் பயணிப்பதற்கு வருடத்துக்கு சுமார் ரூ.80 லட்சம்முதல் ரூ.1 கோடி வரை செலவாகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்தபோதிலும் எனக்கு ஆதரவு இல்லை என்றே உணர்கிறேன். கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே வீரர் நான் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு போட்டியில் வென்ற ஒரே வீரரும் நான் தான். ஆனால் இன்னும் மத்திய அரசு எனது பெயரை டார்கெட் ஒலிம்பிக் பதக்க மேடை திட்டத்தில் சேர்க்கவில்லை.
கடந்த ஆண்டு காயத்துக்குப் பிறகு தரவரிசையில் வீழ்ச்சியடைந்தேன். அப்போது யாரும் எனக்கு உதவ விரும்பவில்லை, நான் திரும்பி வருவேன் என்று யாரும் நம்பவும் இல்லை. அது ஏமாற்றமாக இருந்தது, ஏனென்றால் நான் என்ன செய்தாலும் போதாது. இந்தியாவில் நிதி உதவி கிடைப்பது மிகவும் கடினம். உண்மையைச் சொல்வதானால், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நம்மிடம் நிதி இல்லை, அமைப்புஇல்லை. ஒரு அமைப்பு இருந்தால், நிதி இருக்கும். சீனாவிடம் பணம் உள்ளது. சீனாவைப் போன்ற ஆற்றல் நம்மிடம் உள்ளது. ஒலிம்பிக்கில் நாம் ஏன் 5-6 பதக்கங்களை மட்டுமே வெல்கிறோம். ஆனால் சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் 38 தங்கத்தை வென்றது.
நம் நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. திறமையில் சீனாவுடன் நம்மால் பொருந்த முடியும், ஆனால் நாம் ஏன் உயர்ந்த நிலைக்கு முன்னேறவில்லை? சரியான வழிகாட்டுதல் இல்லை. டென்னிஸில், நாம் உயர்மட்ட அளவில் போட்டியிடுவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். இவ்வாறு சுமித் நாகல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT