Published : 19 Sep 2023 03:38 PM
Last Updated : 19 Sep 2023 03:38 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை இழந்த அடுத்த தலைமுறை வீரர்கள்!

கோப்புப்படம்

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் ‘தி ஹண்ட்ரட்’ எனும் டி20 கிரிக்கெட் மோகத்தால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் குறைந்து வருவதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்டைத்தான் விரும்புகின்றனர். அதிக பணம் கிடைக்கும் லீக் தொடர்களில் விளையாடவே விரும்புகின்றனர். இதன் சமீபத்திய உதாரணம் இலங்கை ஸ்பின்னரும், ஆர்சிபி வீரருமான வனிந்து ஹசரங்கா. கடந்த ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று ரிட்டையர்டு ஆகிவிட்டதைப் பார்த்தோம்.

இதற்கு முன்பாக நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்டும் இதே முடிவை எடுத்தார். முன்னதாக, இதற்கெல்லாம் மூலகர்த்தாவாக இலங்கையின் லஷித் மலிங்கா டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று சிறு வயதிலேயே முடிவு எடுத்து, செயல்பட்டார். மேற்கு இந்தியத் தீவுகளின் சில பல வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே தூரம் ஓடி விடுவதைத்தான் பார்க்கிறோம். 26 வயதில் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். மலிங்கா, போல்ட் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளார்கள் என்றால் தனியார் கிரிக்கெட் செலுத்தும் ஆதிக்கத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர் வீசினால் போதும். 30-35 ரன்களை குறைந்த பந்துகளில் குறித்த நேரத்தில் அடித்தால் போதும். ஒரே போட்டியில் உலக பேமஸ் ஆகிவிடலாம். அனைத்துக்கும் மேலாக நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி நேரத்தையும் உடல் உழைப்பையும் செலுத்தும் போதும் கிடைக்காத பணம் இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் சகல ‘வசதி’களுடன் கிடைத்து விடுகிறது. பொதுவாகவே நிறைய செல்போன் செயலிகள் வந்து விட்ட காலத்தில் நாம் உடலுழைப்பைக் குறைத்து, குறைந்த உழைப்பில் அதிக பணம் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். இதில் கிரிக்கெட் மட்டும் என்ன விதிவிலக்கா என்று கேட்பவர்களும் உண்டு.

இது ஒருபுறம் என்றால் கிரிக்கெட்டின் ‘பிக் 3’ என்று வர்ணிக்கப்படும் மூன்று பெருசுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டை தங்களுக்குள்ளே ஆடி வருகின்றனர். இதனால் மற்ற ஏழை கிரிக்கெட் வாரியங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் அருமையான அரிய திறன் படைத்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைக்காமல் தனியார் லீக் விளையாட சென்று விடுகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 6 ஆண்டுகளாக வருடத்திற்கு 7 டெஸ்ட் போட்டிகளே ஆடுகிறது. 2026-ம் ஆண்டின் பிற்பகுதி வரை தென் ஆப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடப்போவதில்லை. மாறாக பணபலம் மிகுந்த இங்கிலாந்து ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் தங்களுக்குள்ளே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் வரும் ஆண்டுகளில் ஆடுகின்றன. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வாரியத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு எதிர்காலப் பயணத்திட்டத்தை வடிவமைக்கின்றது.

சமீபத்தில் இந்தப் பிரச்சினைகளை அலசும் ஒரு நேர்காணலில் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச், டெஸ்ட் கிரிக்கெட் எப்படி அழிக்கப்படுகிறது என்பது குறித்து தெரிவித்திருந்தார்.

“ஐசிசி நிறைய செய்தாக வேண்டும், என்ன நடக்கிறது என்று பலரும் எழுதியும், பேசியும், விமர்சித்தும் வருகின்றனர். லெஜண்ட் ரிக்கி பாண்டிங்கே டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை குறித்து வருந்துகிறார். நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், விமர்சிக்கலாம். ஆனால், ஐசிசி முடிவெடுக்கவில்லை எனில் நாம் பேசியும் பயனில்லை.

நிறைய தனியார் கிரிக்கெட்டுகள் முளைத்துவிட்டன. வீரர்கள் வாழ்வாதாரத் செல்வம் சேர்ப்பதிலும் குறியாக உள்ளனர். இதனால் டாலர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றனர். பணத்தை நோக்கி படையெடுக்கின்றனர். கிரிக்கெட்டில் கொஞ்ச காலம்தான் ஆட முடியும். ஆகவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று இருப்பதை நான் குறைகூறவில்லை. ஆனால், கவலை என்னவென்றால் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகின்றன.

வருடத்துக்கு 6 டெஸ்ட் போட்டிகள் என்பது எப்படி போதும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தங்களுக்குள்ளேயே 15 போட்டிகளில் ஆடுகின்றனர். இது நிச்சயம் நல்லதல்ல. நான் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக ஜூலையில் டெஸ்ட் ஆடினேன், அடுத்த ஆண்டு ஜனவரி வரை நான் டெஸ்ட் ஆடமாட்டேன். இது மிக நீண்ட இடைவெளி. டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகின்றது, கிரிக்கெட்டை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தி விட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் எந்த வடிவத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதே என் கருத்து” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x