Published : 18 Sep 2023 01:43 AM
Last Updated : 18 Sep 2023 01:43 AM

ஆட்ட நாயகன் விருதுக்கு கிடைத்த ரூ.4.15 லட்சத்தை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார் சிராஜ்

மைதான பராமரிப்பு ஊழியர்களுடன் சிராஜ்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருக்கு வழங்கப்பட்ட ரூ.4.15 லட்சம் பரிசுத் தொகையை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.

“இந்த ரொக்கப் பரிசு மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இதற்கு முழு தகுதியானவர்கள். ஏனெனில் அவர்கள் இல்லாமல் இந்த தொடர் நடந்திருக்காது” என சிராஜ் தெரிவித்தார். 7 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டை அவர் இந்தப் போட்டியில் கைப்பற்றி இருந்தார். இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட்டாக சிராஜின் அபார பந்துவீச்சு பிரதான காரணம். இதே போல ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் சார்பில் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு ரூ.41.54 லட்சம் வழங்கப்பட்டது. இதனை ஜெய் ஷா அறிவித்தார்.

இலங்கையின் கொழும்பு மற்றும் கண்டி பகுதியில் ஆசிய கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெற்ற போது மழை குறுக்கீடு இருந்தது. மழையால் ஆட்டம் தடைபடாத வகையில் மைதான பராமரிப்பு ஊழியர்கள் சிறப்பாக தங்கள் பணியை செய்திருந்தனர். அதன் மூலம் தொடர் திட்டமிட்டபடி நடந்தது.

இந்த தொடரின் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பான போது அதில் தவறாமல் இடம் பெற்றவர்கள் மைதான பராமரிப்பு ஊழியர்கள். மழை குறுக்கிட்டால் பவுண்டரி லைனுக்கு வெளியே காத்திருக்கும் அவர்கள், துரிதமாக செயல்பட்டு மைதானத்தை கவர் செய்வார்கள். மழை நின்ற பிறகு மீண்டும் மைதானத்தை உலர்த்தி, போட்டியை தொடர உதவி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது பணியை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கோலி ஆகியோரும் முன்னர் பாராட்டி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x