Published : 15 Sep 2023 05:57 PM
Last Updated : 15 Sep 2023 05:57 PM
நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்காக எதிர்பார்த்த ஒளிபரப்பு நிறுவனங்கள் முதல் வர்த்தகத் தொடர்புடைய அனைத்துக்கும் இலங்கை அணி ஆப்பு வைத்து இறுதியில் இந்திய அணியை சந்திக்கின்றது. ஆசியக் கோப்பையில் 11-ஆவது முறையாக இலங்கை அணி இறுதிக்குத் தகுதி பெற பாகிஸ்தான் - இந்தியா இறுதிப் போட்டி மீண்டும் ஒரு முறை பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயுள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறிய பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ரமிஸ் ராஜா, ஷோயப் அக்தர், ரஷித் லத்தீப், கம்ரான் அக்மல் ஆகியோர் பாகிஸ்தானின் பயந்தாங்கொள்ளி அணுகுமுறை, பாபர் ஆசாமின் மோசமான கேப்டன்சி மற்றும் ஆச்சரியமான அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.
முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவருமான ரமிஸ் ராஜா கூறுகையில், “இந்தியா கொடுத்த சம்மட்டி அடியிலிருந்து மீள முடியாமல் பாகிஸ்தான் அணி பயந்தாங்கொள்ளித் தனமாக ஆடியதாகத் தெரிகிறது” என்றார்.
“இந்திய அணியிடம் பெற்ற மாபெரும் தோல்வியினால் பின்னடைவு கண்ட பாகிஸ்தான் அணி அந்தத் தோல்வியின் சுமையை இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சுமந்து கொண்டிருந்தாகவே நான் கருதுகிறேன். பயந்து பயந்து ஆடினர். தோல்வி பயம் பிடித்து ஆட்டியது போல் ஆடினர். பாபர் அசாமும் மற்ற டாப் ஆர்டர் பேட்டர்களும் ரொம்பவும் எச்சரிக்கையாக ஆடி கெடுத்து விட்டனர். அதிகாரம் செலுத்தும் வகையில் ஆடவில்லை.
அணித்தேர்வு அதிர்ச்சியளிக்கின்றது. பகர் ஜமான் இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் வீழ்த்திவிடக் கூடிய ஒரு பேட்டராக இருக்கிறார். அவரது உடல் மொழி அதிர்ச்சிகரமாக உள்ளது. பகர் ஜமான் தானே விலகி விடுவது தான் நல்லது. ஸ்லோ பிட்ச்களில் ஒன்றிரண்டு இன்னிங்ஸ்கள் தவிர பாபர் அசாம் தடுமாறுகிறார். ஒரு கேப்டனாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் வேண்டும். ஆணித்தரமான முடிவுகளை அவர் எடுக்கப் பழக வேண்டும்” என்றார்.
முன்னாள் பவுலரும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஷோயப் அக்தர் கூறும்போது, “பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கான தகுதியுடைய அணியாகும். இலங்கையிடம் தோற்றது தர்ம சங்கடம். ஆனால் இலங்கை நெருக்கடி தருணங்களில் பதற்றத்தை சிறப்பாகக் கையாண்டனர்.
பாகிஸ்தான் அணி உரிய லெவனை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு மிக நல்ல வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பையில் செய்த தவறுகளைக் களைய சிந்திக்க வேண்டும்” என்கிறார் ஷோயப் அக்தர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT