Published : 15 Sep 2023 07:52 AM
Last Updated : 15 Sep 2023 07:52 AM
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் வங்கதேச அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும். பணிச்சுமையை கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்கக்கூடும். இந்த வகையில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதிலாக மொகமது ஷமி களமிறங்க வாய்ப்பு உள்ளது. பும்ரா இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஓவர்களையும், இலங்கைக்கு எதிராக 7 ஓவர்களையும் வீசினார். நேபாளம் அணிக்கு எதிராக அவர், களமிறங்கவில்லை.
இதேபோன்று 19.2 ஓவர்கள் வீசி உள்ள மொகமது சிராஜ், 18 ஓவர்கள் வீசியுள்ள ஹர்திக் பாண்டியா ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வுகொடுக்கப்படக்கூடும். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார். இந்த ஆண்டில் அக்சர் படேல் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றி உள்ளார்.
மேலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழ்நிலையில் சரியான நேரத்தில் அவர், பார்முக்கு திரும்புவது அவசியமாகி உள்ளது. பேட்டிங் துறையிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பி உள்ளதால் அவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடருவார். அநேகமாக இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் களமிறங்கப்படக்கூடும்.
முதுகு வலி காரணமாக சூப்பர் 4சுற்றின் முதல் இரு ஆட்டங்களிலும் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கவில்லை. இந்நிலையில் நேற்று அவர், அணியினருடன் இணைந்து தீவிர பேட்டிங் பயிற்சிகள் மேற்கொண்டார். அப்போது அவர், எந்தவித அசவுகரியத்தையும் உணரவில்லை என அணிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஸ்ரேயஸ் ஐயருக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படக்கூடும் தெரிகிறது.
வங்கதேச அணியை பொறுத்தவரையில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சி செய்யக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment