Last Updated : 07 Dec, 2017 10:23 AM

 

Published : 07 Dec 2017 10:23 AM
Last Updated : 07 Dec 2017 10:23 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னையின் எப்சி; நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து 4-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 18-வது லீக் ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றன. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, நடப்பு சாம்பியனும் இரு முறை கோப்பையை வென்ற அணியுமான அட்லெடிகோ டி கொல்கத்தாவை சந்திக்கிறது.

இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இது 4-வது ஆட்டமாகும். தொடக்க ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வி அடைந்த சென்னை, அதன்பிறகு நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், புனே அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி பெற்றது. இந்த இரு வெற்றிகளால் சென்னையின் எப்சி அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

பிரேசிலை சேர்ந்த நடுக்கள வீரரான ரபேல் அகஸ்டோ இதுவரை 2 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார். புனே அணிக்கு எதிராக கேப்டன் ஹென்றி சேரேனோ, ஜெமி காவிலன் உதவியுடன் அற்புதமாக கோல் அடித்திருந்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜெ ஜெ லால்பெகுலா இதுவரை ஒரு கோலை கூட பதிவு செய்யவில்லை. எனினும் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு கோல் அடிக்க சில நெருக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. இன்றைய ஆட்டத்தில் லால்பெகுலா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு சாம்பியனான கொல்கத்தா இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. கேரளா, ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்த கொல்கத்தா அணி, புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ராபி கீன், லைன்டாஹ் ஆகியோர் காயம் அடைந்துள்ளது அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. இவர்களில் லைன்டாஹ் இந்த சீசனில் இருந்தே விலகக்கூடிய நிலை உருவாகி உள்ளது.

இதற்கிடையே இன்றைய ஆட்டத்தில் ராபி கீன் களமிறங்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர ஏற்கெனவே காயம் அடைந்துள்ள ஜெயேஷ் ரானே இன்னும் குணமாகவில்லை. இங்கிலாந்து நடுக்கள வீரரான கார்ல் பெக்கர் காயம் காரணமாக இந்த சீசினில் இருந்தே விலகி உள்ளார். எனினும் இன்றைய ஆட்டத்தில் மார்செலினோ, எமிலியானோ ஆல்பரோ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பாதைக்கு திரும்பச் செய்வார்கள் என கருதப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 3 முறையும், சென்னையின் எப்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஷெரிங்ஹாம் கூறும்போது, “இந்த சீசனை நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை. சாம்பியன் அணிக்கான பாதை இது அல்ல. எங்களுக்கு சில பின்னடைவுகள் இருந்தன. நாங்கள் வெற்றிப்பாதையில் இருந்து வெகு தூரத்தில் இல்லை என நம்புகிறோம். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x