Published : 13 Sep 2023 08:04 AM
Last Updated : 13 Sep 2023 08:04 AM
ராஞ்சி: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 27-ம் தேதி தாய்லாந்துடன் மோதுகிறது.
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல்நவம்பர் 5-ம் தேதி வரை ராஞ்சியில் உள்ள மரங் கோம்கே ஜெய்பால் சிங் ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன.
இந்த தொடருக்கான அட்டவணையை ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்டது. தொடரில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்றில் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 4-ம் தேதி நடைபெறுகின்றன.
தொடக்க நாளான 27-ம்தேதி முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான ஜப்பான், மலேசியாவுடன் மோதுகின்றன. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 3முறை சாம்பியனான கொரியா, சீனாவை எதிர்கொள்கிறது. அன்றைய தினம் நடைபெறும் 3-வது ஆட்டத்தில் தொடரை நடத்தும் இந்தியா, தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் 28-ம் தேதி மலேசியாவுடனும் 30-ம் தேதி சீனாவுடனும், 31-ம் தேதி ஜப்பானுடனும், நவம்பர் 2-ம் தேதி கொரியாவுடனும் மோதுகிறது.
இந்திய அணி விளையாடும் அனைத்து லீக் ஆட்டங்களும் இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபிஹாக்கி தொடரில் இந்திய அணிகடந்த 2016-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. 2018-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT