Published : 14 Dec 2017 09:28 PM
Last Updated : 14 Dec 2017 09:28 PM
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே பெர்த் நகரில் தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற இருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘தி சன்’என்ற நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டியின் போது குறிப்பிட்ட ஓவர்களில் எடுக்கப்படும் ரன்கள் உள்ளிட்ட தகவல்களை ஒரு இந்தியர் உட்பட இரு சூதாட்டத் தரகர்கள் தங்களிடம் பெரும் தொகைக்கு விற்க தயாராக இருந்ததாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. சூதாட்டத்தில் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களும், உலகக் கோப்பையை வென்ற அணியில் உள்ள ஆல்ரவுண்டர் ஒருவரும் ஈடுபட்டிருப்பதாகவும் இரு தரகர்களில் ஒருவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அனைவராலும் அறியப்படும் ‘தி சைலண்ட் மேன்’ என்பவரும் சூதாட்டங்கள் மேற்கொள்ள உதவி வருவதாகவும் சூதாட்டத்தரகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் ஒருவர் பெயரைக்கூட அந்த நாளிதழ் வெளியிடவில்லை. ‘தி சன்’ நாளிதழ் சார்பில் சுமார் 4 மாத காலங்கள் துபை மற்றும் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட ரகசிய புலனாய்வு விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளன.
இந்தியாவை சேர்ந்த இரு சூதாட்டத் தரகர்களும் ஒரு ஓவரில் எத்தனை ரன்கள் அடிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை ‘தி சன்’ நாளிதழ் நிருபர்களின் ரகசிய புலனாய்வு விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை அளிப்பதற்காக சூதாட்டத் தரகர்கள் ரூ.1.20 கோடி தொகை வரை கேட்டுள்ளனர்.
போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக எந்த ஓவரில் எத்தனை ரன்கள் சேர்க்கப்படும் என்ற தகவலை நாங்கள் கூறுவோம். அதை வைத்து நீங்கள் சூதாட்டத்தில் ஈடுபடலாம். எங்களுக்கு சரியான நபர்களிடம் இருந்து தகவல் வரும். அதனால் நீங்கள் நம்பலாம் என்றும் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட சம்மதம் தெரிவிக்கும் வீரர்கள் களத்தில் எந்த மாதிரியான சைகைகளை வெளிப்படுத்துவார்கள் என்பதையும் சூதாட்டத்தரகர்கள் கூறியுள்ளனர். பேட்ஸ்மேனாக இருந்தால் பேட்டிங்கின் போது கையுறையை மாற்றுவாராம். இதை ரசிகர்கள் கூட்டத்தினருடன் கலந்திருக்கும் ஒருவர் சூதாட்டத்தரகர்களுக்கு தெரிவிப்பார். சட்டவிரோதமாக இந்திய சந்தைகளில்தான் அதிக சூதாட்டம் மேற்கொள்ளப்படும்.
ஒரு செஷன் அல்லது ஒரு இன்னிங்ஸில் எவ்வளவு ரன்கள் அடிக்கப்படும், எந்த நேரத்தில் விக்கெட் சரியும், எந்த அணி டாஸில் வெற்றி பெறும் என்ற ஸ்கிரிப்ட்களை நாங்கள் வழங்கிவிடுவோம். சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களும் இதை பின் தொடர்வார்கள். ஆஷஸ் தொடரில் உங்களுக்கு நான் வேலை கொடுக்கிறேன். செஷனில் அடிக்கப்படும் ரன்களை கூறுகிறேன். இது முதல் நாளிலேயோ, இரண்டாவது நாளிலேயோ, 3-வது நாளிலேயோ நடைபெறலாம்.
இரண்டு செஷன்களில் நாங்கள் வேலை செய்ய உள்ளோம். ஒரு செஷனுக்கான அடிப்படையில் ரூ.60 லட்சம் பணம் கட்டலாம், இரு செஷனுக்கு ரூ.1.20 கோடி ஆகும். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் தி சைலண்ட் மேனிடம் நாங்கள் பேசுவோம். நீங்களும் எங்களுடன் ஆஸ்திரேலியா வரலாம். ஆனால் தி சைலண்ட் மேனிடம் நாங்கள் சந்தித்து பேசும்போது உங்களை எங்களுடன் இருக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் சூதாட்டத் தரகர்களில் ஒருவன் கூறியுள்ளதாக ‘தி சன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் டி 20 தொடர், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் ஆகியவற்றிலும் சூதாட்டத்தில் ஈடுபட முடியும் எனவும் சூதாட்டத் தரகர்கள் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் இரு அணிகள் விளையாடிய ஆட்டங்களில் 17 முதல் 18 முறை சூதாட்டம் நடைபெற்றதாகவும் அதிர்ச்சி தகவல்களை அள்ளித் தெளித்துள்ளனர் சூதாட்டத்தரகர்கள்.
ஐசிசி மறுப்பு
இதற்கிடையே ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், “சூதாட்டம் தொடர்பான தகவல்கள் கடுமையான கவலையளிக்கிறது. ஊழல் பற்றி எல்லா குற்றச்சாட்டுகளையும் நாங்கள் தீவிரமாகவே எடுத்துக் கொள்கிறோம். தகவல்களை எங்களுடன் ‘தி சன்’ நாளிதழ் பகிர்ந்து கொண்டது வரவேற்கத்தக்கது. முதல் கட்ட விசாரணையில் ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்ட்டில் சூதாட்டம் நடைபெறுவதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என தெரியவந்துள்ளது. எனினும் தேவையான விசாரணையை மேற்கொள்வோம்” என்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊடகங்கள் எழுப்பி உள்ள குற்றச்சாட்டுகள் தீவிர அக்கறையுடன் உள்ளன. ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விசாரணை குழுவுக்கு ஆஸ்திரேலியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும். வீரர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் எதையும் கண்டறிந்தால் ரகசியம் காக்கும் அடிப்படையில் நிச்சயம் எங்களிடம் தெரிவிப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT