Published : 11 Sep 2023 01:14 PM
Last Updated : 11 Sep 2023 01:14 PM

பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன் - ஓய்வு குறித்து நோவக் ஜோகோவிச்

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மேத்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணி அளவில் இந்தப் போட்டி தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் இந்தப் போட்டி நடைபெற்றது.

பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு (Kobe Bryant) தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தி இருந்தார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார்.

போட்டிக்கு பின் ஓய்வு குறித்து மனம் திறந்து பேசினார் ஜோகோவிச். அதில், "முடிந்தவரை விளையாட திட்டமிட்டுள்ளேன். இப்போது எனது உடல் நன்றாக ஒத்துழைப்பதாக உணர்கிறேன். மேலும் எனது குடும்பம் உட்பட என்னை சுற்றியுள்ளவர்களின் ஆதரவும் இருக்கிறது. டென்னிஸில் தொடர்ந்து பெரிய தொடர்களில் வெற்றிபெற்று வருகிறேன்.

இந்த விளையாட்டில் இன்னும் என்னால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் இப்போதைக்கு ஓய்வுபெற விரும்பவில்லை. தரவரிசையில் நான் இன்னும் முதலிடத்தில் இருப்பதால், எனது விளையாட்டு பாணியை தொடரவே திட்டமிட்டபட்டுள்ளேன். எனவே டென்னிஸை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளே என்னுடைய மிக உயர்ந்த இலக்காகவும் முன்னுரிமையாகவும் இருந்து வருகிறது. போட்டிகளின் அடிப்படையில் நான் அதிகம் விளையாடுவதில்லை. அதனால்தான் நான் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கான பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறேன்." என்றார்.

ஓய்வு பெறுவதற்கு விருப்பமில்லை என்றாலும், தனது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிய நேரங்களும் தமது வாழ்க்கையில் இருந்ததாக ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

"பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன். டென்னிஸில் உச்சம் தொட்ட பின்பும் எனக்கு என்ன தேவை உள்ளது? இன்னும் எவ்வளவு காலம் விளையாட முடியும்? போன்ற கேள்விகளை என்னை நானே கேட்கிறேன். எத்தனை கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என மனது சிந்திக்கவில்லை. மாறாக, முக்கியமான போட்டி தொடர்களில் சிறந்த டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே சிந்திக்கிறேன்" என்று ஜோகோவிச் தெரிவித்தார்.

இதனிடையே, "வெற்றிக்கான தணியாத தாகம் ஜோகோவிச்சை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டி விளையாட வைக்கும்" என்று அவரின் பயிற்சியாளர் கோரன் இவானிசெவிக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x