Published : 02 Jul 2014 01:02 PM
Last Updated : 02 Jul 2014 01:02 PM

போராடி காலிறுதியில் நுழைந்த அர்ஜென்டீனா; ரசிகர்கள் இதயத்தை வென்ற சுவிஸ் கோல்கீப்பர்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்றில், பரபரப்பு மிகுந்த த்ரில் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

118-வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவின் ஆஞ்செல் டி மரியா அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. சுவிட்சர்லாந்தின் இதயம் உடைந்தது.

இந்த வெற்றியைப் பற்றி நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடிந்தவுடன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை: "அதிர்ஷ்டம் அர்ஜென்டீனா பக்கம் இருந்தது" என்றார் மெஸ்ஸி.

இரு அணிகளின் 2 மணி நேர, இருபக்க மோதல்கள் மற்றும் விரயமான முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் லயோனல் மெஸ்ஸிதான் அர்ஜென்டீனாவின் மீட்பரானார். நடுக்களத்தில் சுவிஸ் கோல் பகுதிக்கு 40 அடி தள்ளி இருந்தார் மெஸ்ஸி.

அவருக்கு முன்னால் நிறைய இடம் இருந்ததை, அவர் தனக்கான கணமாகக் கண்டு கொண்டார். அவரது வழக்கமான சடுகுடு பாணியில் பந்தை மிக வேகமாகக் கடத்தி வந்தார். ஃபேபியன் ஸ்கார் என்ற சுவிஸ் வீரரைக் கடந்தார், மற்றொரு சுவிஸ் வீரர் ரிகார்டோ ரோட்ரிகஸிற்கு சிறிது நேரம் போக்குக் காண்பித்தார். பிறகு அவருக்குப் பின்னால் காலியாக இருந்த இடத்திற்குப் பந்தை சாதுரியமாகத் தட்டி விட்டார்.

பந்து பெனால்டி பகுதிக்குள் வந்தது. ஆஞ்செல் டி மரியா வந்தார். சுவிஸ் கோல் கீப்பர் டீகோ பெனாக்ளியோவைத் தாண்டி கோலை அடித்தார். ரசிகர்கள் எழுச்சியுற்றனர். அர்ஜென்டீன இசைவிழா தொடங்கியது.

ஆனால், உடனேயே சுவிட்சர்லாந்து சமன் செய்திருக்கும். சுவிஸ் வீரர் பிளெரிம் சீசெமெய்லி கார்னர் ஷாட்டை தலையால் அடிக்க அது கோல் பாரில் பட்டு ரீ-பவுண்ட் ஆனது. அதனை முட்டிக்காலால் கோலுக்கு வெளியேதான் அடிக்க முடிந்தது.

முன்னதாக... மெஸ்ஸிக்கு இணையாக ஷெர்தான் ஷகீரி:

1954ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிக்கு நுழையும் கனவுடன் சுவிட்சர்லாந்து ஆட்டத்தைத் துவங்கியது.

ஆனால் இரு அணிகளுக்கும் வெறுப்பே மிஞ்சியது. மெஸ்ஸியால் தனது 4 கோல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை.

ஆட்டம் தொடங்கி 15வது நிமிடத்தில் இவர் பந்தை வேகமாகக் கொண்டு சென்று கோலை நோக்கி அடிக்க, சுவிஸ் கோல் கீப்பர் பெனாக்ளியோ அதனை முறியடித்தார்.

பிறகு மீண்டும் ரிகார்டோ ரோட்ரிகஸ் மற்றும் வாலன் பெஹ்ராமி ஆகியோரை இரண்டாகப் பிளந்து கொண்டு பந்தை எடுத்துச் சென்றார். ஆனால் அதற்குள் ரோட்ரிகஸ் சுதாரித்து வந்து பந்தை தட்டி விட்டார்.

கடைசியில் கோல் அடித்த ஆஞ்செல் டி மரியாவும் சுவிஸ் வீரர்களுக்கு பெரும் தொல்லைகொடுத்தார். அப்படிப்பட்ட ஒரு மூவில்தான் பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே சுவிஸ் வீரர் ஃபவுல் செய்ய ஃப்ரீ கிக் கிடத்தது.

அதனை மெஸ்ஸி அடித்தார். சரியாக சக வீரர் ஹிகுவேயிற்கு மெஸ்ஸி அடிக்க அவர் தலையால் கோலை நோக்கி அடித்தார். ஆனால் பந்து மேலே சென்றது.

அர்ஜென்டீனாவில் மெஸ்ஸி எப்படியோ அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் சுவிஸ் வீரர் ஷெர்தான் ஷகீரியும் ஈடு கொடுத்து ஆடினார். ஷகீரி அர்ஜென்டீனாவின் மார்கஸ் ரோஜோவைச் சுற்றி பந்தை அழகாக எடுத்துச் சென்று அர்ஜென்டீனா கோல் பகுதியின் முனைக்கு பாஸ் செய்ய அங்கு கிரானிட் ஜாக்கா கோல் நோக்கிப் பந்தை அடிக்க அர்ஜென்டீனா கோல் கீப்பர் ரொமீரோ பந்தை பிடித்தார்.

இதை விட ஒரு அருமையான வாய்ப்பைக் கோட்டை விட்டது சுவிட்சர்லாந்து. இந்த முறையும் ஷகீரிதான் மூல கர்த்தா. அவர் தன்னிடம் வந்த பந்தை அருமையாக அதிவேகமாக எடுத்துச் சென்றார். பின்பு அவரை அர்ஜென்டீனா சுற்றம் சூழ அவர் பந்தை ஜோசிப் டிரிமிக் என்பவருக்கு அடித்தார். அவருக்கு முன்னால் கோல் கீப்பர் ரொமீரோ மட்டுமே நிற்கிறார். நிச்சயம் கோல்தான் என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது ரொமீரோ கையில் அந்த ஷாட்டை அவர் அடித்தார். இது புரிந்து கொள்ள முடியாத ஒரு ஷாட்டாகவே இருந்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் ஷகீரி அர்ஜென்டீன கோல் கீப்பர் ரொமீரோவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த முறை ஃப்ரீ கிக் விரயம் ஆனது. மெஸ்ஸி கூறியது உண்மைதான், "அர்ஜென்டீனாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது".

மெஸ்ஸி... மெஸ்ஸி... மெஸ்ஸி:

மெஸ்ஸியிடம் பந்து வரும்போதெல்லாம் ரக்பி வீரர்கள் போல் சுவிஸ் வீரர்கள் அவரை எதிர்கொண்டனர். அர்ஜென்டீனா அணியிடம் ஒரே ஒரு உத்தியே இருந்தது. யாரிடம் பந்து வந்தாலும் மெஸ்ஸியிடம் அடிப்பது. அதாவது எப்போதும் மெஸ்ஸியிடமே அடி என்பதே அந்த அணியின் தாரக மந்திரமாக இருந்தது. மெஸ்ஸி மட்டும்தான் மெஸ்ஸியிடம் அடிக்க முடியவில்லை.

அர்ஜென்டீனா அணியின் தடுப்பு அரண் பலவீனமாக இருக்கிறது. ஸ்ட்ரைக்கர்கள் இல்லை. மெஸ்ஸிதான் அந்த அணியின் பலம் பலவீனம் இரண்டுமே.

எப்படியோ தனது அனைத்து பலவீனங்களுடன் அர்ஜென்டீனா காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இனி மெஸ்ஸி மேஜிக் என்ன ஆகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரசிகர்கள் இதயத்தை வென்ற சுவிஸ் கோல்கீப்பர்

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி நொடிகள் வரை சற்றும் சோர்வையடையாமல், சுவிஸ் அணிக்கு வெற்றி தேடித்தர பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், அந்த அணியின் கோல்கீப்பர் பெனாக்ளியோ. சுவிஸ் அணிக்கு அரணாகவே திகழ்ந்தார். இறுதியில், அர்ஜென்டீனா கோல் திணித்த பிறகு, இருந்த கடைசி 2 நிமிடங்களில் எப்படியேனும் சமன் செய்துவிட முடியாதா என்ற ஆவேசத்தில், ஆடுகளத்தின் நடுவிலேயே வந்து சுவிஸ் கோல்கீப்பர் விளையாடியது, அவரது முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் சான்றாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x