Published : 06 Sep 2023 11:38 AM
Last Updated : 06 Sep 2023 11:38 AM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் களம் காண்கிறது இந்திய அணி. இந்நிலையில் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
தோனி: 2004 முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என 538 சர்வதேச போட்டிகளில் தேசத்துக்காக விளையாடி 17,266 ரன்கள் எடுத்தவர் தோனி. கிரிக்கெட் உலகின் மகத்தான கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த ஃபினிஷர் என போற்றப்படுகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையில் தோனி: 2007 (மேற்கிந்தியத் தீவுகள்), 2011 (இந்தியா), 2015 (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து) மற்றும் 2019 (இங்கிலாந்து) என கடந்த நான்கு ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி அங்கம் வகித்துள்ளார். மொத்தம் 29 போட்டிகளில் (25 இன்னிங்ஸ்) விளையாடி 780 ரன்கள் எடுத்துள்ளார். 5 அரை சதம் இதில் அடங்கும். 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் பதிவு செய்த 91 ரன்கள் தான் உலகக் கோப்பை அரங்கில் அவர் பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும். 34 கேட்ச்கள் மற்றும் 8 ஸ்டம்பிங் செய்துள்ளார். கடைசியாக கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் விளையாடி இருந்தார். அதுதான் அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி.
சிறந்த ஃபினிஷர்: கதை, கவிதை, கட்டுரை என எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பான முறையில் சுபத்துடன் முடித்து வைப்பது மிகவும் அவசியம். தோனி, தான் சார்ந்துள்ள கிரிக்கெட் விளையாட்டில் அதில் மன்னாதி மன்னன். அதனை களத்தில் பலமுறை நிரூபித்துள்ளார். அதற்கு சிறந்த உதாரணம் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர். அவர் அணியில் இருந்தவரை அந்தப் பணியை செவ்வனே செய்தார்.
2023 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஃபினிஷர்: நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர். அவர்கள் அணியின் லோயர் ஆர்டரில் ஃபினிஷர் ரோலை ஏற்று செயல்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தோனி ஓய்வு பெற்ற நிலையில் அந்தப் பொறுப்பை இவர்கள் ஏற்று செயல்பட வேண்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT