Published : 06 Sep 2023 10:43 AM
Last Updated : 06 Sep 2023 10:43 AM

ODI WC 2023 | ஆஸ்திரேலிய அணியில் ஷான் அபாட்: புதிய நட்சத்திரம் சங்கா இல்லை!

கமின்ஸ் | கோப்புப்படம்

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் இடம்பெற்றுள்ளார். சமீபமாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் லெக் ஸ்பின்னர் சங்கா அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதே போல் வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸும் இல்லை.

ஸ்பின்னர்களாக அனுபவசாலியான ஆடம் ஜாம்பா, ஆஷ்டன் ஆகர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஜாஷ் இங்லிஸ் ரிசர்வ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித், பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயமடைந்திருந்தாலும் உலகக் கோப்பைக்குள் தேறி விடுவார்கள் என்று அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா 8 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக இந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது. அதனால் செப்.28ம் தேதி வரை ஐசிசி அனுமதி இல்லாமல் அணியில் மாற்றம் கொண்டு வர முடியும். எனவே இறுதி அணியில் லேசான மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. கடைசி நேர இணைப்பாக டிம் டேவிட், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் போன்றோரும் அணிக்குள் வர வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அறிவித்த 18 வீரர்கள் கொண்ட தற்காலிக அணியிலிருந்து இப்போது உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமல் போன 3 வீரர்கள் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா ஆகியோர்களாவார்கள். இந்திய அணியைப் போலவே ஆஸ்திரேலிய வீரர்களும் அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால் காயமடைகின்றனர். இதனால் உலகக் கோப்பைத் தயாரிப்பு இந்திய அணியின் தயாரிப்பைப் போலவே அறுந்த நிலையில் உள்ளது.

கமின்ஸ், ஸ்மித் மணிக்கட்டு காயமடைந்துள்ளனர். மேக்ஸ்வெல் முழங்கால் காயமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் மாற்றம் இருக்கும். வார்னருடன் இறங்கப்போவது ட்ராவிஸ் ஹெட்டா அல்லது மிட்செல் மார்ஷா என்ற விவாதங்களும் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், ட்ராவிஸ் ஹெட் பெரிய சக்ஸஸ் காட்டுவதால் அநேகமாக அவர்தான் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா தன் உலகக் கோப்பை முதல் போட்டியில் சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி இந்திய அணியுடன் மோதுகிறது. ஆஸ்திரேலிய உலகக் கோப்பை தொடருக்கான அணி வருமாறு:

பாட் கமின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜாஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x