Published : 13 Dec 2017 08:20 PM
Last Updated : 13 Dec 2017 08:20 PM
மொஹாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேத்யூஸ் ஏற்கெனவே முன்னரே முடிந்து விட்ட போட்டியில் ஒரு ஆறுதல் சதம் கண்டார். அவர் 111 ரன்கள் எடுத்து நாட் அவுட்.
இலங்கை அணி 393 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 251/8 என்று 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்திய அணி தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.
இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்கள் வீசி 65 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், புவனேஷ், பாண்டியா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற மீண்டும் யஜுவேந்திர சாஹல் 10 ஓவர்களில் 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
விரட்டல் முதல் 10 ஓவர்களிலேயே சுவாரசியமற்றுப் போனது இலங்கை அணி 10 ஓவர்களில் 41/2 என்று ஆனது. தரங்கா 7 ரன்களில் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்கப்போய் பிறகு செக் செய்து கவர் திசையில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.
குணதிலக, 16 ரன்களில் பும்ராவின் லெக் திசை பந்தை சரியாக கிளான்ஸ் செய்யாமல் தோனியிடம் கேட்ச் ஆனார். இலங்கை 30/2 என்று ஆனது. திரிமானேவுக்கு நேரம் சரியில்லை 35 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று தன்னையே யார்க் செய்து கொண்டு பவுல்டு ஆனார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார்.
செத்த போட்டியில் மேத்யூசும், டிக்வெல்லாவும் இணைந்து கொஞ்சம் அடிக்கப் பார்த்தனர், இருவரும் சேர்ந்து 53 ரன்கள் சேர்த்த நிலையில் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 எடுத்த டிக்வெல்லா சாஹலின் ஷார்ட், வைடு பந்தை சரியாக ஆடாமல் ஷார்ட் தேர்ட்மேனில் சுந்தரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், இன்னிங்ஸ் பாதி கடந்த நிலையில் தேவைப்படும் ரன் விகிதம் 10 ரன்களுக்கும் மேல் சென்றதால் நெருக்கடி கூடியது.
குணரத்னே, மேத்யூஸ் இணைந்து ஸ்கோரை 115-லிருந்து 159 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது 5 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த குணரத்னே, சாஹல் பந்தை மேலேறி வந்து ஆட முற்பட்டார், சாஹல் பந்தின் வேகத்தையும் லெந்தையும் குறைக்க பந்து ஸ்பின் ஆகி மட்டையைக் கடந்து செல்ல தோனி மீதி வேலையைப் பார்த்தார், ஸ்டம்ப்டு அவுட்.
கேப்டன் திசர பெரேராவும் 5 ரன்களில் தோனியின் அருமையான டைவ் கேட்சுக்கு வெளியேறினார். பதிரனா, தனஞ்ஜயாவை முறையே புவனேஷ், பும்ரா வீழ்த்தினர். அஞ்சேலோ மேத்யூஸ் 132 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
இந்த இன்னிங்சைப் பார்த்த போது 1999 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 47/4 என்று முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்ப அஜய் ஜடேஜா ஒரு சதம் அடிப்பார், பயனற்ற சதம், ஆனாலும் குறைகூறுவதற்கில்லை. மொத்தமாக சரணடையாமல் யாராவது ஒருவர் பயனற்றதாக இருந்தாலும் ஒரு முனையை தாங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆடப்படும் இன்னிங்ஸ்களாகும் இது. மேத்யூஸைக் குறைகூறுவதற்கில்லை. எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிவடையும் போது ஒருவர் இப்படி ஆடுவதை குறை கூற முடியாது. ஆல் அவுட் ஆகாமல் 251/8 என்று முடிப்பது சரிவிலும் ஒரு நம்பிக்கையூட்டும் அம்சம்.
ஆட்ட நாயகன் வேறு யாராக இருக்க முடியும்? ரோஹித் சர்மாவேதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT