Published : 06 Sep 2023 07:44 AM
Last Updated : 06 Sep 2023 07:44 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் அல்கரஸ்

கார்லோஸ் அல்கரஸ்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா, ஆன்ஸ் ஜபூர் ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 61-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கரஸ் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் அல்கரஸ், 12-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவெரேவுடன் மோதுகிறார். ஜிவெரேவ் 4-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னரை 6-4,3-6,6-2,4-6,6-3 என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் 41 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்ரே ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 123-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜேக் டிராப்பரை தோற்கடித்தார்.

கால் இறுதி சுற்றில் ஆந்ரே ரூப்லெவ், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். டேனியல் மேத்வதேவ் தனது 4-வது சுற்றில் 13-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 2-6,6-4,6-1,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா 6-1, 6-3 என்ற நேர் செட்டில் 13-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். 9-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-7 (3-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 3-6 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த 17-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கீஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதேபோன்று 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபூர் 2-6, 4-6 என்றசெட் கணக்கில் 23-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜெங் குயின்வெனிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x