Published : 06 Sep 2023 07:54 AM
Last Updated : 06 Sep 2023 07:54 AM
மும்பை: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.57 லட்சம் என ஆன்லைன் விற்பனையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்களை ஐசிசி-யின் முதன்மை விற்பனை தளங்கள் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியும் செப்டம்பர் 3-ம் தேதியும் விநியோகித்தன. ஒரு மணி நேரத்துக்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
இந்நிலையில் இதே போட்டிக்கான இரண்டாம் நிலை சந்தை டிக்கெட்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் தளமான வியாகோகோ இதற்கான செயலில் இறங்கி உள்ளது. இந்த இணையதளத்தில் மைதானத்தின் சவுத் பிரீமியம் ஈஸ்ட்-3 கேலரி பகுதி டிக்கெட்டின் விலை ரூ.21 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே கேலரியின் மேல் அடுக்கு பகுதியில் உள்ள பிரீமியம் டிக்கெட்டின் விலை ரூ.57 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இரண்டே இரண்டு டிக்கெட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது அதிருப்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒரு பயனர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறும்போது, “இங்கே என்ன நடக்கிறது? உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.4.5 லட்சம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என வியாகோகோ வெளியிட்டுள்ளது. இது பகல் கொள்ளை" என்றார்.
மற்றொரு பயனர் கூறும்போது, “நேற்று இந்தப் போட்டியின் டிக்கெட் விலை ரூ.15 லட்சம் என்று பார்த்தேன். ஆனால் தற்போது அந்த டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டுவிட்டது அல்லது நீக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாகிஸ்தானுடனான போட்டி மட்டுமல்லாமல் வேறு மைதானங்களில் இந்தியா பங்கேற்கும் போட்டிக்கான டிக்கெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.41 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை என டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியா, இங்கிலாந்து போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.2.3 லட்சம் என வியாகோகோ இணையதளம், செல்போன் செயலியில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT